தலைநகர் காபூலுக்குள் அதிரடியாக நுழைந்த தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசின் நிலை என்ன? - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

தலைநகர் காபூலுக்குள் அதிரடியாக நுழைந்த தலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசின் நிலை என்ன?

காபூலுக்குள் நுழைந்துள்ள தலிபான்களுடன் அரசுப் படைகள் சண்டையிடுமா அல்லது சரண் அடையுமா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2 ஆவது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர். 

முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை.

நாட்டின் 4 ஆவது பெரிய நகரான மசார்-இ-ஷெரீப் நகர், நங்கர்காரின் தலைநகர் ஜலாலாபாத் ஆகிய நகரங்களை எந்த எதிர்ப்பும் இன்றி தலிபான்கள் கைப்பற்றினர். இவ்வாறு தொடர்ந்து முன்னேறிய தலிபான்கள் இன்று அதிரடியாக காபூலுக்குள் நுழைந்தனர். 

அனைத்து பகுதிகளில் இருந்தும் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இனி அரசுப் படைகள் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதைப் பொருத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.

தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்துள்ளதால், இனி ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அரசாங்கத்திற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று தலைநகரை தக்க வைத்துக் கொள்ள உக்கிரமான பதில் தாக்குதலை நடத்துவதற்கு ராணுவத்தை தயார்படுத்த வேண்டும். இல்லையென்றால், தலிபான் படைகளிடம் சரணடைய வேண்டும். தலிபான்களுடன் அரசுப் படைகள் சண்டையிடுமா அல்லது சரண் அடையுமா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

நாடு ஸ்திரத்தன்மையை இழந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேற்று உரையாற்றிய அஷ்ரப் கானி, மக்கள் மீது திணிக்கப்பட்ட போரில், அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதை அனுமதிக்க மாட்டேன் என்றும், ஒற்றுமையுடன் செயல்பட்டு நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்றும் கூறினார். இராணுவத்தை மீண்டும் ஒருங்கிணைப்பது பற்றியும் குறிப்பிட்டார். 

ஆனால், மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் ஆகிய முக்கிய நகரங்களை இழந்தது, அஷ்ரப் கானிக்கும் அவரது அரசுக்கும் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

அதேசமயம், சண்டையிட்டு தலைநகர் காபூலை பலவந்தமாக கைப்பற்ற திட்டமிடவில்லை என தலிபான் அமைப்பு கூறி உள்ளது. எனவே, தலைநகரையும் சண்டை இல்லாமலேயே தலிபான்கள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment