ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள் : அனைத்து விமானங்களின் வருகை, புறப்பாடு இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள் : அனைத்து விமானங்களின் வருகை, புறப்பாடு இடைநிறுத்தம்

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2ஆவது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறினர். 

முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. 

இன்று தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழைந்தனர். நாங்கள் சண்டையிட விரும்பவில்லை, சமாதான முறையில் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்தது

இந்நிலையில், காபூல் நகரை தங்கள் வசமாக்கிய தலிபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றினர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை காபூல் நகரில் 11 மாவட்ட மையங்களில் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக தாலிபன் இயக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்ட மையங்களில்தான் முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

தலைநகருக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தங்களுடைய ஆயுதமேந்திய போராளிகள் நுழைந்ததாக அவர்கள் கூறினர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகையை தாலிபன்கள் கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது எங்கெல்லாம் தங்களுடைய கட்டுப்பாடு உள்ளது என்பதை தாலிபன்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு ராணுவ விமானங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையால் அந்த நாட்டின் வான்பரப்பில் பறக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment