கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் வெறும் ஊடக காட்சிப்படுத்தல் மாத்திரமே முன்னெடுப்பு : விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபையை உருவாக்குங்கள் - முன்னாள் பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

கொவிட் கட்டுப்பாட்டு செயலணியினால் வெறும் ஊடக காட்சிப்படுத்தல் மாத்திரமே முன்னெடுப்பு : விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபையை உருவாக்குங்கள் - முன்னாள் பிரதமர் ரணில்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் செயற்பாடுகளினால் எவ்வித முன்னேற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை. வெறும் ஊடக காட்சிப்படுத்தல் மாத்திரமே இச்செயலணியால் முன்னெடுக்கப்படுகிறது. இச்செயலணியை நீக்கி உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கமைய விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அனைத்துக்கும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி பொறுப்புக்கூற வேண்டும். இனியும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படாவிட்டால் கொவிட் தாக்கத்தால் இந்தியா கடந்த மாதங்களில் எதிர் கொண்ட நிலையினை நாமும் எதிர்கொள்ள நேரிடும்.

எனவே இராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்காமல் சுகாதார தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேவைக்கேற்ப சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபை உருவாக்கப்படுவது கட்டாயமாகும்.

நாட்டில் தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமாக பரவலடைந்துள்ளது. நாளாந்தம் நூறை அண்மித்தளவில் கொவிட் மரணங்கள் பதிவாகின்றன. கொவிட் வைரஸ் தொற்று மற்றும் பதிவாகும் மரணம் தொடர்பிலான தகவல்கள் குறித்தும் சிக்கல் நிலை காணப்படுகிறது.

இந்தியாவை விட இலங்கையின் நிலை பாரதூரமாகும் என சுகாதார தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் குறித்தும் பிரச்சினை காணப்படுகிறது. தடுப்பூசி செலுத்தல் சுகாதார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படாமல், இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றிலும் பல குறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment