ஹபரனையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் விவகாரம் : இராணுவ மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 5, 2021

ஹபரனையில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் விவகாரம் : இராணுவ மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

மின்னேரியா - ஹபரனை தேசிய வன விலங்குகள் பூங்காவில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, மரண அச்சுறுத்தல் விடுத்து ஒருவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், இராணுவத்தின் 21 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கெக்கிராவை நீதிவான், சமன் வெரனியகொட இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

இந்த விவகாரத்தில், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கெக்கிராவை நீதிவான் நீதிமன்றில் தாக்கல்செய்துள்ள முறைப்பாடு நேற்று மீள விசாரணைக்கு வந்தது. இதன்போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் சார்பில், வன பாதுகாப்பு அதிகாரி சட்டத்தரணி ஏ.பி.கே.ரி. ஜயவர்தன நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தார்.

வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்தல் விடுத்து ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் தமது திணைக்களம் நீதிமன்றில் முன் வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்கு மூலம் பெற, குறித்த மேஜர் ஜெனரலை பல முறை அழைத்த போதும் அவர் வாக்கு மூலம் வழங்க வரவில்லை என சட்டத்தரணி ஜயவர்தன நீதிமன்றில் சுட்டிக்கடடினார்.

விலங்குகள் மற்றும் இயற்கை தொடர்பிலான நீதி குறித்த அமைப்பின் சார்பில் இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி அனுரத்த விஜேரத்ன, விலங்குகள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல், அதிகாரத்தை கொன்டு அச்சுறுத்தல் விடுத்தமை மிக ஆபத்தானது என குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே குறித்த மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவை மன்றில் ஆஜராக நீதிவான் உத்தரவிட்டார்.

முன்னதாக மின்னேரியா - ஹபரனை தேசிய வன விலங்குகள் பூங்காவின் ஒரு பகுதியில், சட்ட விரோதமாக யானை குட்டியொன்றினை பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்துக்கு இடமான முறையில் வனப்பகுதியிலிருந்து சென்ற இராணுவ வாகனங்கள் இரண்டை நிறுத்த முயன்றமையை மையப்படுத்தி வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் 21 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க கடந்த ஜூலை 1 ஆம் திகதி ஹபரனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 31, ஹபரனை பொலிஸார் கெக்கிராவை நீதிவான் சமன் வெரனிகொட முன்னிலையில், கடந்த மே 23 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விடயங்களை சமர்ப்பித்த போது, அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அத்துடன் இதுவரை அவரை கைது செய்யாமை தொடர்பில் அவர் பொலிஸாரைடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே கடந்த ஜூலை முதலாம் திகதி காலை தனது சட்டத்தரணியுடன் மேஜர் ஜெனரால் மொஹான் சமரநாயக்க, ஹபரனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது அவரைக் கைது செய்த பொலிஸார் கெக்கிராவை நீதிவான் சமன் வெரனிகொட முன்னிலையில் ஆஜர் செய்திருந்தனர்.

இதன்போது அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்த நீதிவான் வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் மன்றில் ஆஜராக மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே, இந்த விவகாரத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் மன்றில் முன் வைத்துள்ள முறைப்பாடு மீதான விசாரணைகள் நேற்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வந்தது. அது தொடர்பிலேயே செப்டம்பர் 2 ஆம் திகதி மன்றில் ஆஜராக தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஜூன் 23 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மரண அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடாத்தியதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள், அநுராதபுரம் கட்டளை தளபதியாக செயற்படுவதாக கூறப்படும் மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்கவுக்கு எதிராக ஹபரனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.

பெயர் பெற்ற பிரபல நபர்
யானைக் குட்டிகளை கடத்துவது தொடர்பில் பெயர் பெற்ற, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ள பிரபல நபர் ஒருவர் மின்னேரியா வன விலங்குகள் சரணாலயம் அருகே உள்ள ஓரிடத்தில் முகாமிட்டுள்ளதாகவும், அவருடன் குழுவொன்று அடிக்கடி காட்டுக்குள் சென்று வருவதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வன விலங்குகள் பூங்காவுக்குள் இருந்து வெளியேற முடியுமான அனைத்து வாயில்களிலும் விஷேட காவல் அரண்களை ஏற்படுத்தி, வன ஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம் விஷேட சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராணுவத்தின் இரு வாகனங்கள்
இதன்போதே, மின்னேரியா வன விலங்குகள் சரணாலயத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய ஹபரனை பகுதியில், சரணலயத்தில் இருந்து வந்த இரு வாகனங்களை முதல் காவலரணில் இருந்த அதிகாரிகள் மறித்துள்ளனர்.

எனினும் அவை குறித்த கட்டளையை மீறி வேகமாக பயணித்துள்ள நிலையில், ஏனைய வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகரிகளினால் ஏற்படுத்தப்பட்டிருந்த காவலரண்களிலும் கட்டளையை மீறி பயணித்துள்ளன.

இதனையடுத்து கெப் ரக வாகனங்கள் இரண்டினையும் வன ஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போது அவை இராணுவ வாகனங்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் , கல்குளம் இராணுவ பொலிஸ் காவல் மையத்துக்கு அறிவித்துள்ளனர்.

அதை நிறுத்த முடியாது, பயணிப்பவர் மேஜர் ஜெனரல்
இதன்போது அந்த வாகனத்தை நிறுத்த முடியாது எனவும், அது மேஜர் ஜெனரல் பயணிக்கும் வாகனம் என அங்கிருந்து பதில் கிடைத்ததாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அவ்விரு வாகனங்களையும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்ற போதும், அவை அனுராதபுரம் 21 ஆம் கட்டளை தலைமையகத்துக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், இராணுவ முகாமுக்குள் செல்ல வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காததால், அவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளனர்.

இரு தரப்பினரும் முறைப்பாடு
இந்நிலையில், திரும்பிக்கொண்டிருந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை ஹபரனை - பளுகஸ்வெவ பகுதியில் வைத்து இராணுவ சோதனை சாவடியில் இராணுவத்தினர் மறைத்துள்ளனர். இதன்போது வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு வாகனத்தை நிறுத்தவே, அவர்களை பின் தொடர்ந்து வந்த இராணுவ வாகனங்களில் இருந்து இராணுவத்தினர் சிலர் இறங்கி வந்துள்ளனர்.

'நான் தான் மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க'
அதிலிருந்த உயர் அதிகாரி ஒருவர் 'நான்தான் அநுராதபுரம் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க, உங்களால் என்னை நிறுத்த முடியாது. உங்களை தூக்கிவிடுவேன். கவனம்...' எனவும் மேலும் சில கெட்ட வார்த்தைகளைக் கொண்டும் மிக பாரதூரமாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளும் அவ்விடத்தில் தமது நியாயங்களை முன் வைக்கும் போது, அது வாய்த்தர்க்கமாக மாறி, இராணுவ மேஜர் ஜெனரலினால் தாக்குதல் நடாத்தப்பட்டு, அதிகாரிகளின் தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளின் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது என்.டப்ளியூ.கே. வாசல எனும் அதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தலையீடு செய்த ஹபரனை பொலிஸ் பொறுப்பதிகாரி
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் போது ஸ்தலத்துக்கு ஹபரனை பொலிஸ் பொறுப்பதிகாரியும் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதுடன், வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது கடமையினையே செய்துள்ளதாகவும், இவ்வாறு மோசமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் மேஜர் ஜெனரலுக்கு தெரிவித்து தொலைபேசிகளை அவர்களிடம் கையளிக்குமாறும் கூறியுள்ளதாக அறிய முடிகிறது. இவ்வாறான நிலையிலேயே இரு தரப்பினராலும் ஹபரனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நற் பெயருக்கு சிக்கல் - இராணுவம்
இது தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவிய போது, அநுராதபுரம் 21 அவது கட்டளை மையத்தின் பிரதானி மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க ஹபரனை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி வரும் போது இரு வாகனங்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளன என தெரிவித்தார். அத்துடன் மேஜர் ஜெனரல், முகாமுக்குள் நுழைந்ததும், பின் தொடர்ந்து வந்தவர்கள் முகாம் வாயிலில் , மேஜர் ஜெனரலின் வாகனத்தில் யானைக் குட்டி இருப்பதாக கூறிவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர். தனது நற்பெயருக்கு இவ்வாறு கலங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் மேஜர் ஜெனரால் மொஹான் ரத்நாயக்க ஹபரனை பொலிசாருக்கு முறையிட்டுள்ளார். அங்கு எந்த தாக்குதல் சம்பவங்களும் நடக்கவில்லை. என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன அப்போது குறிப்பிட்டிருந்தார்.

அறிக்கையை சமர்ப்பிக்கவும்; கெக்கிராவை நீதிமன்றம்
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கெக்கிராவை நீதிவான் நீதிமன்றுக்கு உடனடியாகவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமது பணிகளுக்கு இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்னேரியா வன விலங்குகள் சரணாலய பொறுப்பதிகாரி பாத்திய மடுகல்ல ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பீ அறிக்கை குறித்து கெக்கிராவை நீதிவான் நீதிமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கெக்கிராவை நீதிவான் சமன் வெரனிகொட உத்தரவிட்டிருந்தார்.

அவ்விசாரணைகள் குறித்த வழக்கே நேற்று விசாரணைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment