நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நெருங்குகிறது அரசாங்கம் - கலாநிதி தயான் ஜயதிலக - News View

Breaking

Saturday, August 28, 2021

நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நெருங்குகிறது அரசாங்கம் - கலாநிதி தயான் ஜயதிலக

ஆர்.ராம்

இலங்கையில் சீனாவின் மூலோபாய நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றை திசை திருப்புவதற்காகவும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொள்வதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நெருங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சியின் வெளிநாட்டு உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச்சாத்தியமான 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்கும் கோரிக்கையை கைவிட்டு அதற்கு அப்பாலான விடயங்கள் பற்றி பேசுவதும் கடந்த கால விடயங்களை மீளவும் வலியுறுத்திக் கொண்டிருப்பதும் மீண்டும் ஒரு தடவை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களை முன்வைத்துக் கொண்டிருப்பதால் அவர்களின் விடயத்தில் எவ்விதமான ஆரோக்கியமான நிலைமைகளும் ஏற்படாது. மாறாக வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கள் ஆகியவற்றுக்கு அப்பால் சீன மயமாக்கலும் உருவெடுக்கும் ஆபத்துக்கள் நிறைவே உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்குரிய முன்னகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதார ரீதியில் அடுத்து வரும் காலத்தில் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவுள்ளது. இவ்வாறான நிலையில் அதற்கு சீனாவின் உதவிகளைத் தண்டி மேற்குலகத்தின் உதவிகளும் நன்கொடைகளும் அவசியமாக இருக்கின்றன.

ஆனால் சீனா இலங்கையில் அதீதமாக பிரசன்னம் அடைந்துள்ளதோடு தமது மூலோபாய செயற்பாடுகளுக்கு இலங்கையை பயன்படுத்துமளவிற்கு நிலைமைகள் காணப்படுகின்றன. இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் பிரச்சினையான விடயமாகின்றது.

ஆகவே தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்திற்கு தீர்வளிக்குமாறு இந்தியா அரசாங்கத்தினை அழுத்தமாக வலியுறுத்துகின்றது. மறுபக்கத்தில் அமெரிக்கா தனது மேற்குலக சகாக்களுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்தான் அரசாங்கம் இந்தியாவையும் அமெரிக்காவும் திசை திருப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதாக கூறுகின்றபோது இந்தியாவையும் அமெரிக்காவை பகுதி அளிவிலும் சமாளிக்க முடியும்.

அதேநேரம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலத்திடம் பேச்சுக்களை முன்னெடுக்கின்றோம் புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளோம், பயங்கரவாத தடைச் சட்டத்தினை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை உப குழுவை நியமித்துள்ளோம், அதனை விட ஆலோசனைக்குழுவை நியமித்துள்ளோம் என்றெல்லாம் காரணங்களை கூற முடியும்.

அதன் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் பொறுருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கான உதவிகளைப் பெற முடியும் என்றும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்துவதற்கு தயாராகின்றது. அதில் தவறில்லை. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறிதமான இப்பிரச்சினை தீர்வுக்காக கூட்டமைப்பு முன்வைத்த அதே விடயங்களையே மீண்டும் முன்வைக்கின்றது. அதனால் எவ்விதமான பயனுமில்லை.

முதலில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவும் அதற்கான தேர்முறையை மாற்றியமைக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு சபைகளினதும் அதிகாரங்களை கைகளில் வைத்துக் கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் அதேநேரம், அதிகாரப்பகிர்வு குறித்த அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

இதனைவிடுத்து சாத்தியமில்லாத அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைளை முன்கூட்டியே முன்வைப்பதால் எவ்விதமான சாத்தியமான விடயங்களும் நிகழப்போவதில்லை. அரசாங்கம் தமக்கு தென்னிலங்கையிலும் ஆட்சியின் பங்காளிகளாலும் ஏற்படும் எதிர்ப்புக்களை காண்பித்து காலத்தினைக் கடத்தும்.

இதனால், கூட்டமைப்பால் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு அடியேனும் முன்னகர முடியாத நிலையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். கடந்த காலத்தில் சந்திரிகா, ரணில், மைத்திரி-ரணில் கூட்டு ஆகிய தருணங்களில் உள்ள அனுபவத்தினை கூட்டமைப்பு மீட்டிப்பார்க்க வேண்டும்.

தற்போதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆரம்பித்த இடத்திலேயே உள்ளது. ஆகவே இந்த நிலைமை இனியும் தொடர்வதற்கு கூடாது. அதற்கான மூலோபாயங்களை கூட்டமைப்பு வகுக்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கின்றது என்பதில் நம்பிக்கை வைத்து அதியுச்ச கோரிக்கைளை முன்வைத்துக் கொண்டிருப்பதானது ஆபத்துக்களையே ஏற்படுத்தும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தற்போது முன்னெடுக்கப்படும். இராணுவ மயமாக்கல் சிங்கள மயமாக்கல் ஆகியவற்றுக்கு மேலதிகமாக சீன மயமாக்கலும் தோற்றம் பெறும் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. எனவே முதலில் மாகாண சபை அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டு இராஜதந்திர மூலோபய நகர்வுகளை கூட்டமைப்பு மேற்கொள்வதே பொருத்தமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment