கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க கல்முனை பிரதேசத்தில் தீவிர ஏற்பாடுகள் : தடுப்பூசி ஏற்றிய பின்னரும் அதே பாதுகாப்பை அனைவரும் தொடர வேண்டியது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க கல்முனை பிரதேசத்தில் தீவிர ஏற்பாடுகள் : தடுப்பூசி ஏற்றிய பின்னரும் அதே பாதுகாப்பை அனைவரும் தொடர வேண்டியது கட்டாயம்

கொவிட் தொற்றுக்கு உள்ளானோருக்கு சிகிச்சையளிக்கவென ஆதார கல்முனை பிரதேச வைத்தியசாலைகளில் கட்டில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அதனை மேற்கொள்வோம். கொவிட் நோயாளிகள் அதிகரிப்பதால் காரைதீவு சாய்ந்தமருது வைத்தியசாலைகளின் ஒரு பகுதியை கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். நிந்தவூர் வைத்தியசாலையை பூரணமாக கொவிட் வைத்தியசாலையாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் தெரிவித்தார்.

“இடைத்தங்கல் நிலையங்கள் முறைமையை ஒழித்து, அவற்றையும் சிகிச்சை நிலையங்களாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கொவிட் குணங்குறிகள் குறைந்த நோயாளிகள் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி கண்காணிப்பில் இனிமேல் வீடுகளில் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

அரசாங்கத்தின் உத்தரவின்படி அதற்கான பயிற்சியை எமது உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளோம். அரசின் அறிவிப்பு வந்ததும் அடுத்த வாரமளவில் அவ்வாறானோரை வீடுகளில் தங்க வைத்து பராமரிக்கின்ற செயற்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

அண்மைக் காலமாக கொவிட் தொற்றுக்குள்ளாவோரில் 10 வீதமானோர் வைத்தியசாலை சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த 3 தினங்களாக 50 வீதமானோர் இவ்விதம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

எமக்கு இறுதியாகக் கிடைத்த தடுப்பூசிகளைக் கொண்டு முதலாவது டோஸ் இதுவரை 92 வீதமானோருக்கு வழங்கியுள்ளோம். இது சாதனையாகக் கருதப்பட்டது. எனினும் 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் தடுப்பூசிகளைப் பெறாத காரணத்தினால் மரணமடையும் பரிதாபம் ஏற்பட்டது.

இன்றைய நிலைமையில் முதலாவது டோஸ் நிறைவு செய்ய 50 ஆயிரம் தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸ் ஆரம்பிக்க 2 இலட்சத்து 40 ஆயிரமும் தேவைப்படுகின்றன. முதலாவது டோஸ் ஏற்றி 3 வாரங்கள் கடந்துள்ளன. எனவே இரண்டாவது டோஸ் இன்னும் ஒரு வார காலத்தில் ஏற்றப்பட வேண்டும்.

அதனிடையே பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து கொவிட் தொற்றுக்கு எதிராக போராடுவோம். எனவே பொதுமக்கள் நிலைமையையுணர்ந்து இரண்டாவது டோஸ் ஏற்றும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் அதே பாதுகாப்பை அனைவரும் தொடர வேண்டியது கட்டாயம்.

அரசாங்கம் விரைவில் இந்தியாவிலிருந்து 190 தொன் எடையுள்ள ஒட்சிசன் தாங்கிகளை கொண்டு வரவுள்ளது. எமக்கு 12 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் 6 ஆயிரம் லீற்றர் கொள்ளவுள்ள தாங்கிகள் தரப்பட்டால் சவாலை எதிர்கொள்ளலாம். எமது பிராந்திய வைத்தியசாலைகளுக்கென பாரிய ஒட்சிசன் தாங்கிகள் தேவை. அதற்கு 65 மில்லியன் ரூபா தேவையாகும். ஒட்சிசன் இல்லாவிடில் எமது முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைய வேண்டி நேரிடும்.

அதேவேளை மருத்துவ உபகரணங்களும் கட்டில்கள் உட்பட வேறு சில உபகரணங்களும் தேவையாகின்றன. மல்டிறீடர் மொனிற்றர், ஒக்சிசென்றியேற்றர், ஹைபுளோ ஒக்சிமெஷின் ஆகியன தேவையாகின்றன. 

நாம் எமது சுகாதார அணியினருடன் இணைந்து இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றோம். கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேற்சொன்ன வசதிகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் இன்றைய நிலையில் சுமார் 1000 நோயாளிகள் உள்ளனர். ஆனால் இருப்பதோ 500 கட்டில்கள். மீதி 500 நோயாளிகளும் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. ஆதலால் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரு வாரத்தில் கட்டில்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (டி.சி.சி) 'சூம்' தொழினுட்பத்தில் நடைபெற்ற போது கல்முனை அலுவலகத்திலிருந்தவாறு அவர் இவ்விபரங்களைத் தெரிவித்தார்.

'சூம்' தொழினுட்பத்தின் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தவாறு இக்கூட்டத்தில் 'சூம்' முறையில் பங்குபற்றினர்.

“கல்முனை பிராந்தியத்தில் இதுவரை சுமார் 5000 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 106 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. சராசரியாக தினமும் 100 தொற்றுக்களும், 2 மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன. தடுப்பூசி தாமதமானதன் விளைவு இது. 

எமது பிராந்தியத்திலுள்ள 07 ஆதார வைத்தியசாலைகளில் கொவிட் பிரிவுக்கென 200 கட்டில்களே உள்ளன. இடைத்தங்கல் நிலையங்களில் 370 கட்டில்கள் உள்ளன. கட்டில்கள் அனைத்திலும் நோயாளிகள் நிறைந்திருப்பதால் இடநெருக்கடி சிக்கல் தோன்றியுள்ளது.

சுமார் 500 நோயாளிகள் இடமில்லாமல் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எமது பிராந்தியத்தில் அதி ஆபத்து நிறைந்த பிரதேசங்களாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கல்முனை வடக்கு, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகியன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன” என்றும் டொக்டர் சுகுணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment