தலிபான்களுடன் இந்தியா பேச்சு நடத்துகிறதா? வெளியுறவு அமைச்சர் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

தலிபான்களுடன் இந்தியா பேச்சு நடத்துகிறதா? வெளியுறவு அமைச்சர் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றியிருக்கும் தலிபான் தொடர்பான நிகழ்வுகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்படுவதை உறுதிப்படுத்துவதிலேயே தற்போதைக்கு இந்தியா கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க்குக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள அவரிடம் செய்தியாளர்கள் பேசினர். அப்போது தலிபான்களுடன் சமீபத்தில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதா என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதில் தெரிவிக்காத ஜெய்சங்கர், "தற்போதைக்கு ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறியிருப்பதை காண்கிறோம். தலிபான்களும் அவர்களின் பிரதிநிதிகளும் காபூல் வந்தடைந்துள்ளனர். எனவே, இனி நடக்கும் நிகழ்வுகளை இந்த தொடக்கத்தில் இருந்தே பார்க்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமை மீதான இந்தியாவின் பார்வை குறித்து கேட்டதற்கு, "இப்போது தானே வந்திருக்கிறார்கள், பார்க்கலாம்," என்று ஜெய்சங்கர் பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தானுடனான பிற உறவுகள், முதலீடுகள் தொடருமா என கேட்டதற்கு, "அந்த நாட்டு மக்களுடனான வரலாற்றுபூர்வ உறவுகள் அப்படியே இருக்கும். வரும் நாள்களில் நமது அணுகுமுறையை அது தீர்மானிக்கும். இப்போதைக்கு அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது," என்று ஜெய்சங்கர் கூறினார்.

No comments:

Post a Comment