வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கம் - வவுனியா மாவட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அமைச்சர் வாசு தெரிவிப்பு - News View

Breaking

Monday, August 16, 2021

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கம் - வவுனியா மாவட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அமைச்சர் வாசு தெரிவிப்பு

Ameen M Rilan

வவுனியா மாவட்ட 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின்குளம், மகரம்பகுளம் மற்றும் மாமடுவ ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் குடிநீர் குழாய்களை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படும். இதற்கு 46.24 மில்லியன் ரூபாய் செலவிடப்படும். இங்கு 8.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பொருத்துதல் மற்றும் புதிய இணைப்புக்களை வழங்குதல் என்பன இடம்பெறும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களில் குடிநீர் குழாய்களை வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இந்த வவுனியா நீர் திட்டத்திற்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடமாக சேராறு நீர்த் தேக்கம் காணப்படுகின்றது. வவுனியாவுக்கு குடிநீரை வழங்குவதற்கு இந்த நீர்த் தேக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியாவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்கு நீர் பெற்றுக் கொள்ளும் வளங்கள் போதுமானளவு காணப்படுகின்றன என்பது தெளிவாக உள்ளது. புதிய குழாய்களைப் பொருத்தி அனைவருக்கும் குடிநீர் வழங்குவது எமது வேலைத் திட்டமாகும். அதற்காகத்தான் நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 

வருடாந்தம் நாம் வரவு செலவுத் திட்டம் மூலம் குறிப்பிடத்தக்க அளவு குடிநீருக்காக நிதியை ஒதுக்கி எமது நீர் வளங்கள் அமைச்சு பணியாற்றி வருகின்றது. அதன் மூலம் வடக்கிற்கும் வவுனியா பிரதேசத்திற்கும் குடிநீர் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கமாகும்.

நீர் தொடர்பான பிரச்சினைகளால் நாடுகளுக்கிடையில், பிரதேசங்களுக்கிடையில் யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. நீர் பிரச்சினையால் இன்றும் இந்தியாவில் இரண்டு பிராந்தியங்களுக்கிடையில் முரண்பாடு காணப்படுகின்றது. எமக்கு இந்நாட்டில் இந்தியாவை விட அதிகமாக நீர் காணப்படுகின்றது. எமக்கு ஏரிகள் மற்றும் குளங்கள் காணப்படுகின்றன. பாரிய நீர்த் தேக்கங்கள் காணப்படுகின்ற அதேவேளை பாரிய நதிகளாக உருவெடுத்துள்ள சிறிய சிறிய நீரோட்டங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. இதனால் சேராறு நீர்த் தேக்கம் மூலம் வவுனியாவுக்கான நீரை பெற்றுக் கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். வவுனியாவின் அனைத்து பிரதேசங்களுக்கும் நீர் செல்லும் வகையில் நீர் குழாய்களை பொருத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

"ஒவ்வோர் வீட்டுக்கும் குடிநீர்" இது தான் எமது வாக்குறுதி. எதிர்வரும் 2025ம் ஆண்டு எமது அரசின் காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் அனைத்து வீடுகளுக்கும் குடிநீரை குழாய்கள் மூலம் சுத்தமாக பெற்றுக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். இதுதான் எமது வாக்குறுதியாகும். இந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த அரசு செயல்படும்.

இந்தப் பகுதிகளில் சுகாதார கழிவறை வசதிகளில் சிக்கல்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் அந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவதற்கு நமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும். சுகாதார கழிவறைகள் இல்லாத வீடுகளுக்கு உரிய தரத்திலான கழிவறைகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். எமக்கு இங்கு இனப்பிரச்சினை இல்லை. இங்கு எல்லோரும் மனிதர்களே. எனவே இந்நாட்டிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி குடிநீரை வழங்குவதே எமது நோக்கமாகும். இதனை எம்மால் நிறைவேற்ற முடியும் என தான் நம்புவதாக நீர்வழங்கல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மற்றும் நீர் வளங்களின் அமைச்சரின் வன்னி மாவட்ட இணைப்பாளர் வி. சங்கரலிங்கம் உள்ளிட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment