அம்பாறையில் முதல் தடவையாக டெல்டா நோயாளி இனங்காணப்பட்டார் : பாதுகாப்பாக இருக்குமாறு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

அம்பாறையில் முதல் தடவையாக டெல்டா நோயாளி இனங்காணப்பட்டார் : பாதுகாப்பாக இருக்குமாறு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக டெல்டா திரிபு கொவிட் நோயாளி இனங்காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (6) வெள்ளிக்கிழமை இச்செய்தி வெளியாகியதையடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் காணப்பட்டது.

பாடசாலைகள் பல பூட்டப்பட்டிருந்தன ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாத்திரம் சமுகமளித்திருந்தனர். அவர்களும் இச்செய்தியையறிந்ததும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

சில அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் ஊழியர்கள் லீவை போட்டுவிட்டு வெளியேறினர். பொது இடங்களில் இருந்த மக்கள் வீடு நோக்கி விரைந்தனர்.

மொத்தத்தில் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் நிலவியதைக் காணமுடிந்தது.

இதேவேளை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் பொதுமக்களுக்கு பொதுவான அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனைப் பிராந்தியம் வருகிறது. மூவினங்களும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்ற அம்பாறை மாவட்டத்தில் இந்த டெல்டா திரிபு வைரஸ் மிக இலகுவாக பரவ வாய்ப்புண்டு.

எனவே மக்கள் முதலாவது தடுப்பூசி போட்டு விட்டோம் என்ற அலட்சியத்துடன் இருந்து விடாது, சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கடந்த ஒரு சில நாட்களாக வழமைக்குமாறாக எமது பிரதேசத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. 

இங்கும் 'டெல்டா' வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே சுகாதாரத் துறையை மாத்திரம் நம்பியிராது சுகாதார நடைமுறைகளை முறைப்படி கடைப்பிடித்து முடியுமானவரை வீட்டிலிருங்கள் என்றார்.

தினகரன்

No comments:

Post a Comment