நாட்டை முடக்க ஜனாதிபதியும், நிதியமைச்சரும் மாத்திரமே எதிர்ப்பு என்கிறார் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

நாட்டை முடக்க ஜனாதிபதியும், நிதியமைச்சரும் மாத்திரமே எதிர்ப்பு என்கிறார் நளிந்த ஜயதிஸ்ஸ

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ளது. ஆகவே நாட்டை முடக்குங்கள் என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதால் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி சுகாதார அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தினால் ஜனாதிபதி செயலகத்தின் சேவையாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டு சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் பாராளுமன்ற கூட்டத் தொடர் பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டு மக்கள் மாத்திரம் அவதான நிலையிலும் உயிரை பணயம் வைத்து நடமாட வேண்டும். சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு ஜனாதிபதி செவிசாய்க்காமல் பிடிவாதமாக உள்ளார். இவரின் பிடிவாதம் நாட்டு மக்களை பலியெடுக்கும். ஆகவே நாட்டு மக்கள் முடிந்தளவிற்கு தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் எந்தளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள். வைரஸ் தாக்கத்தின் அபாயகரமான கட்டத்தை நாடு இப்போது அண்மித்துள்ளது. வைத்தியசாலைகளின் சேவை வழங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் கொவிட் தாக்கத்தின் அபாயகரமான கட்டத்தை அடைந்த போது காணப்பட்ட தன்மைகளே தற்போது எமது நாட்டிலும் காணப்படுகிறது. சுகாதார சேவைக்கு சவால் விடுக்கும் நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். சுகாதார சேவையாளர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிக்குமாயின் நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும் என்றார்.

No comments:

Post a Comment