மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதால் இது தொடர்பில் சகல மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சகல அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு திரும்பியுள்ளதோடு, அதற்காக பொதுப் போக்குவரத்துக்களும் சேவையில் ஈடுபடுகின்றன.
பொலிஸ் தலைமையகத்தினால் இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சகல மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்திற்காக செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயணிப்பதற்கு இடமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாகாண எல்லைகள் உள்ளிட்ட ஏனைய எல்லைப் பகுதிகளிலும் எவ்வித இடையூறும் இன்றி பயணிப்பதற்கு இலங்கை பொலிஸாரால் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
எவ்வாறிருப்பினும் பணிக்கு செல்பவர்கள் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்படும் போது உரிய அடையாள அட்டையை காண்பித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக பேரூந்து சாரதிகள், நடத்துனர் மற்றும் உதவியாளர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.
அதனை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment