தகவல் அறியும் சட்டமும் நாமும் - News View

Breaking

Sunday, August 8, 2021

தகவல் அறியும் சட்டமும் நாமும்

Mohamed Rifdhi Nawas

ஒரு ஜனநாயக நாட்டின் பொதுமக்களாகிய நாம் தகவல் அறியும் சட்டத்தின் தன்மை மற்றும் வலிமை பற்றி அறிதல் மிகவும் பயனுள்ளதாக அமையும். தகவலறியும் சட்டம் எனும் போது பொது அதிகார சபைகளில் எமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, நாட்டிலுள்ள அரசியல் யாப்பினூடாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் அடிப்படை/மனித உரிமையாகவும் உள்ளது. இந்த இரண்டு பிரதான உரிமைகளும் உள்ளடங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையின் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க சட்டமாக தகவலுக்கான உரிமைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தினை பயன்படுத்துவதனூடாக பொது அதிகார சபைகளின் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை மேலோங்க செய்வதோடு பிரஜைகள் ஊழலை எதிர்த்து நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் பங்கேற்பதற்கு வழிவகுத்தது எனலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரஜைகள் ஊழலை எதிர்த்து நிற்பதற்கும் ஊழல்களை ஆதாரபூர்மாக வெளிப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பெரிதும் பயன்படுகின்றது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் பிரஜைகள் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆணைக்குழுவானது பிரஜைகளுக்கான தகவல் உரிமையை உறுதி செய்கின்ற அதே வேளையில் பொது அதிகார சபைகள் தகவல் அதிகாரிகள் தகவல்களை பூரண சுதந்திரத்துடன் கையாள்வதையும் உறுதிசெய்கின்றனர்.

சில சமயங்களில் தகவல் அறியும் சட்டத்தை உபயோகித்து பிரஜைகள் தகவல்களை கோருகின்ற சந்தர்ப்பங்களில் தகவலதிகாரிகள் தகவல்களை வழங்குவதில் சில சிரமங்களை எதிர்நோக்கினர். அதாவது, மேதிகாரிகளின் அழுத்தம், தகவலை வழங்க விடாமல் தடுத்தல் போன்ற காரணங்களால் தகவலதிகாரிகளால் தகவல்களை வழங்க முடியாதிருந்தது. அவ்வாறான வேளைகளில் தகவலதிகாரிகள் ஆணைக்குழுவின் உதவியை நாடிய வேளையில் தகவலதிகாரிகளுக்கு தகவல்களை கையாள பூரண சுதந்திரம் இருப்பதை ஆணைக்குழு மீள உறுதி செய்தது.

தகவல் அறியும் சட்டம் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், பொது அதிகார சபைகளிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு சவால்கள் காணப்பட்டன. அதிகமான பொது அதிகாரசபைகள் தகவல்களை வழங்க மறுத்தன. அவ்வேளைகளில் பிரஜைகளால் ஆணைக்குழுவுக்கான மேன்முறையீட்டினை மேற்கொண்டு, தங்களுக்கான தகவல்களை பெற்றுக்கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்ததோடு ஊழல் எதிர்ப்பிற்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கினர்.

தகவல் அறியும் ஆணைக்குழுவானது 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன சட்டபூர்வ ஆணைக்குழுவாகும். ஆணைக்குழுவானது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை வலுப்பெறச் செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை செய்கின்றது. அந்த வகையில் தகவல் அறியும் உரிமையை மேற்பார்வையிட்டு செயல்படுத்தும் ஒரு நிறுவனமாகவும் அமையப்பெற்றுள்ளது.

பொது அதிகாரிகள் மற்றும் தகவல்களைக் கோரி வி;ண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகளுக்கு பயனுள்ள தீர்ப்புக்களை வழங்கி செயற்படுத்தும் ஒரு நிறுவனமாகவும் தகவல் அறியும் ஆணைக்குழு செயற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சுயாதீன ஆணைக்குழுவானது அதன் வலைத்தளத்தை முகாமை செய்தல், வளவாளர்ளைக் கொண்டு பொது அதிகார சபைகளில் உள்ள அதிகாரிகளுக்கு காலத்திற்கு காலம் பயிற்சிகளை / விழிப்புணர்வை வழங்குவது, பொதுமக்களுக்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்பூட்டல், பொது அதிகார சபைகளுக்கு தாமாக தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தும் விபரங்களை தெளிவூட்டல், மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு முறையை முன்னெடுத்தல், முகாமை செய்தல் என்பன போன்ற பணிகளை மேற்கொள்கின்றது. மேலும் தகவல் அறியும் உரிமையில் கூறப்பட்டுள்ள சட்டத்திட்டங்களுக்கு இணங்கி செயற்படாத அதிகாரிகள் / அதிகார சபைகளை வெளிப்படையான விசாரணைகளை நடத்துவதற்கும், பொது அதிகாரிகளுக்கு எதிராக ஒழக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த ஆணைக்குழுவைப் பொறுத்தவரை அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் கொண்டமைந்ததாகும். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களில் ஆழ்ந்த அனுபவமுள்ளவர்கள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள்.

தகவலறியும் சட்டத்தை உபயோகிக்கும் போது பொதுமக்களுக்கும், பொது அதிகார சபைகளுக்கும் இடையில் ஏற்படுகின்ற பிணக்குளை நீதியான முறையில் தீர்த்து வைப்பதும் இந்த ஆணைக்குழுவின் பொறுப்புக்களில் ஒன்றாகும். பொதுமக்களுக்கு இந்த ஆணைக்குழு ஒரு பலமாகவே செயல்படுகின்றது. அத்துடன் பொது நலன் மேலோங்கி காணப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொது மக்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயல்படுவதும் இந்த ஆணைக்குழுவின் சிறப்பம்சமாகும்.

மேலும் பொது மக்கள் தமது தகவலுக்கான உரிமையை உரிய முறைப்படி பாவிக்கும் போது மட்டுமே அதன் தனித்துவம் மற்றும் சுயாதீனமான தன்மையை நீடிக்க / நிலைநிறுத்த முடியும். பொது மக்களாகிய நாம் எமது உரிமைகளை பெற அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடைமுறையிலுள்ள பொறிமுறைகளுக்கு உயிரோட்டமளிக்காதவிடத்து அதன் நிலைத்திருக்கும் தன்மையைப் பேணமுடியாமல் போய்விடலாம். அவ்வாறு உரிமைகளைப் பயன்படுத்தாதவிடத்து நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் மேலோங்கி அதிகாரங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலை உருவாகலாம். இதுவரைக்கும் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட பெரும்பாலான முறைப்பாடுகளுக்கு பொதுமக்களின் நலனைக் அடிப்படையாகக் கொண்ட நீதியானதும் நேர்மையானதுமான தீர்ப்பக்களுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனவே நாட்டின் 20 ஆவது அரசியலமைப்பு மாற்றங்களுடனான தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை இம்முறை நியமிக்கும் போது மீண்டும் சயாதீனமான ஒரு ஆணைக்குழுவாக செயற்படுவதற்கு பொறுத்தமான புத்தி ஜீவிகளை உரிய பதவிகளுக்கு நியமிப்பதற்கு பொதுமக்களாகிய நாம் எப்பொழுதும் விழிப்பாக இருப்பதும், ஒத்துழைப்பு வழங்குவதும் மிகவும் இன்றியமையாதாகும். எனவே ஒரு சயாதீனமான ஆணைக்குழு எவ்வளவு முக்கயமானது என்பதை நாம் கவனத்தில் கொள்வதுடன், நேர்மையான நாட்டை உருவாக்கும் உன்னதமான பணியில் நாமும் இணைந்து பயணிப்போம், பயனடைவோம்.

இலங்கைப் பிரஜைகளாகிய நாம் எமது தகவலறியும் உரிமையை நிலைத்திக்கச் செய்வதற்கும், நாளைய எமது தலைமுறைக்கு ஊழலற்ற நாட்டை உருவாக்குவதற்கும் முயற்சிப்போம்.

இக் கட்டுரையானது ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (TISL) வினால் எழுதப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad