கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் கண்டுபிடிப்பு : ’நோயின் ஆபத்தை ஒப்பிடுகையில் குறைவு’ - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் கண்டுபிடிப்பு : ’நோயின் ஆபத்தை ஒப்பிடுகையில் குறைவு’

கொரோனா வைரசுக்கான அஸ்ட்ராஜெனீகா (கோவிஷீல்ட்) தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு போன்றவை ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகரிப்பதாக தடுப்பூசிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசியால் இந்த சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பை விட, தடுப்பூசி போடாமல் விட்டு கொரோனா தொற்று ஏற்படுமானால், அப்போது இதே சிக்கல்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் அதே ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் இடர்பாடு மிகவும் அதிகம் என்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக முன்னெடுப்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை விட, போடாமல் விட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயன்களை இது மேலும் ஒருமுறை உறுதி செய்வதாக ஆய்வுக் குழு குறிப்பிடுகிறது.

பிபிசி ரேடியோ நியூகேஸ்டல் செய்தி வாசிப்பாளர் லிசா ஷா என்பவர் அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசியால் ஏற்பட்ட சிக்கலால் இறந்தார் என்று அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை உறுதி செய்த நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது.

அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டார் 44 வயது லிசா ஷா. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து அவருக்கு தலைவலி ஏற்பட்டு மே மாதம் இறந்து விட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது.

டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2.9 கோடி பேரின் தரவுகளையும், கொரோனா தொற்று ஏற்பட்ட 18 லட்சம் பேரின் தரவுகளையும் ஆராய்ச்சிக் குழு பரிசீலித்தது.

தடுப்பூசி போட்டுக் கொண்டோ, தொற்று ஏற்பட்டோ 28 நாட்கள் வரையில் மேலே குறிப்பிட்ட சிக்கல்கள் ஏற்பட்டதா என்பதை இந்த ஆராய்ச்சிக் குழு கணக்கில் எடுத்துக் கொண்டது.

இந்த ஆராய்ச்சி பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

அஸ்ட்ராஜெனீகா போட்டுக் கொண்டவர்களில்
அஸ்ட்ராஜெனீகா (கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது) தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதை விட கூடுதலாக 107 பேருக்கு த்ராம்போசைட்டோபீனியா ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அல்லது இறந்து போயினர். ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டு இதே மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களை விட 9 மடங்கு குறைவாகவே இந்த எண்ணிக்கை உள்ளது.

த்ராம்போசைட்டோபீனியா ஏற்பட்டவர்களுக்கு உடலின் உள்ளே ரத்தப் போக்கு அல்லது ரத்தக் கசிவு ஏற்படும்.

அதே போலவே அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதை விட கூடுதலாக 66 பேர் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அல்லது இறந்து போயினர். இது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இதே சிக்கல் ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 200 மடங்கு குறைவு.

ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில்
அதைபோல, ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒவ்வொரு 1 கோடி பேரிலும் வழக்கமாக ஏற்படுவதை விட கூடுதலாக 143 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றுக்குப் பின் பக்கவாதம் ஏற்படுவோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது 12 மடங்கு குறைவு.

தடுப்பூசியால் ஏற்படும் இந்த இடர்பாடுகளை மக்கள் அறிந்திருப்பது முக்கியம். ஆனால், கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏற்படும் இடர்ப்பாடுகளை விட இது பல மடங்கு குறைவு என்ற விஷயத்தையும் சேர்த்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜூலியா ஹிப்பிஸ்லே-காக்ஸ் கூறியுள்ளார்.

ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து குறைய வேண்டும் என்றால் கொரோனா ஏற்படுகின்ற ஆபத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுவதாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு ஆய்வாளர் பேராசிரியர் அஜிஸ் ஷேக் கூறியுள்ளார். தடுப்பூசிகள் மிகப்பெரிய பொது சுகாதார ஆதாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment