ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெற்றி கொள்ள குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் : நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெற்றி கொள்ள குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் : நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் - நாமல் ராஜபக்ஷ

ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெற்றி கொள்வதற்காக குறுகிய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வீர, வீராங்கனைகளின் மன வலிமையை உறுதிப்படுத்தவும் விசேட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இளைஞர், விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் பதிலளிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றி கொள்ள ஒரு நாடு 10 முதல் 15 வருடங்கள் தயாராகின்றன. இம்முறை ஜப்பானும் அவ்வாறானதொரு முறைமையை பின்பற்றியே பதக்கங்களை வெற்றி கொண்டு வருகிறது. 

எமது நாட்டில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விளையாட்டு கவுன்சில் ஊடாக 2032ஆம் ஆண்டு வரையான பத்தாண்டு திட்டமொன்றின் ஊடாக இந்த இலக்கை அடைந்து கொள்ள எதிர்பார்க்கிறோம்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளோம். சில வீரர்கள் தாம் வழமையாக அணியும் உடையை அணிவதாக ஒலிம்பிக் குழுவிடம் கூறியுள்ளனர். அவ்வாறு இடம்பெற முடியாது.

என்றாலும் வீர, வீராங்கனைகளில் நடத்தை விதிகளே இதற்கு காரணமாகும். இது தொடர்பில் நாம் உரிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். நடத்தை விதிகளை பாராளுமன்றத்தில் சட்டமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment