தலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைத்து விட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றுத் தஞ்சமளித்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தலிபான்கள் முற்றுகையிடும்போதே ஜனாதிபதி அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்ட தகவல் பரவத் தொடங்கியது. பணம் நிரப்பப்பட்ட கார்களில் அவர் தப்பியதாகவும் செய்திகள் உலவின.
நாடு நெருக்கடியில் இருக்கும்போது அஷ்ரப் கனி தப்பிச் சென்றதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 20 ஆண்டுகள் போரை நடத்திய அமெரிக்காவும் இதைக் கண்டித்திருக்கிறது. தலிபான்களின் வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும், படைகளுமே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் அளித்திருக்கும் பேட்டியில் அஷ்ரப் கனியை விமர்சித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி இனி முக்கிய நபராக கருதப்பட மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் வென்டி ஷெர்மன் கூறினார்.
உள்நாட்டு அரசியல்வாதிகளும் அஷ்ரப் கனியின் செயலைக் கடுமையாகக் கண்டித்தனர். "கடவுள் அவரைப் பொறுப்பாக்குவார். நாடு அவருக்கு உரிய தீர்ப்பை வழங்கும்" என தேசிய நல்லிணக்கக் குழுவின் தலைவர் அப்துல்லா அப்துல்லா கூறினார்.
நாட்டில் இருந்து சுமார் 1.200 கோடி ரூபாய் பணத்தை அவர் எடுத்துக் கொண்டு சென்றதாக ஆப்கானிஸ்தானுக்கான தஜிகிஸ்தான் நாட்டுத் தூதர் முகமது ஜாகிர் அக்பர் குற்றம் சாட்டினார்.
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு அஷ்ரப் கனி பதில் அளித்திருக்கிறார். "நெருக்கடியில் இருந்து நாடு மீள வேண்டும். ரத்தக்களறி தவிர்க்கப்பட வேண்டும்" என்பதுதான் தமது நோக்கம் என்று அவர் வெளியிட்ட காணொளியில் கூறியிருக்கிறார்.
பெரும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியதாக பரவும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது பேச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பானது.
தாம் தப்பியோடவில்லை என்றும் தமது பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும் அவர் கூறினார்.
"எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை" என்றும் அஷ்ரப் கனி தெரிவித்தார்.
"நிகழ்வுகள் மிக வேகமாக நடந்தன. தலிபான் களுடன் பேச்சு நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்கவே நான் விரும்பினேன்" என்றார் அவர்.
கானி எத்தனை விளக்கத்தைக் கொடுத்தாலும் தலிபான்கள் எல்லையில் முகாமிட்டிருக்கும்போது, குடிமக்களை அவர்களிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதற்கு இன்னும் வலுவான காரணங்கள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஏனென்றால் 1990 களில் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி முகமது நஜிபுல்லா சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்படியொரு நிலைமை ஏற்படலாம் என்று கனி அஞ்சியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நஜிபுல்லாவுக்கு என்ன நேர்ந்தது?
1980 களின் இறுதியில் பெரும் போருக்குப் பிறகு சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. அப்போது சோவியத் ஆதரவு பெற்ற முகமது நஜிபுல்லா ஜனாதிபதியாக இருந்தார். சோவியத் படைகள் இருந்த காலத்திலேயே நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்த முஜாஹிதீன்கள், சோவியத் வெளியேறியதும் வேகமாக முன்னேறத் தொடங்கினார்கள்.
1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முஜாஹிதீன்களின் படைகள் காபூலை அடைந்தன. நஜிபுல்லா சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவானவர், மத நம்பிக்கை இல்லாதவர், ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்பவர். அதனால் முஜாஹிதீன்களுடன் அவருக்கு பல வகையில் முரண் இருந்தது.
வேறு வழியின்றி தனது பதவியை ராஜிநாமா செய்த நஜிபுல்லா காபூலில் இருந்து தப்பிவிட முயற்சி செய்தார். இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார். ஒரு ரகசிய விமானத்தில் இந்தியாவுக்குத் தப்பி வர திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியாவும் உதவி செய்யத் தீர்மானித்தது.
திட்டம் தெளிவாக இருந்தது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து கார்கள் மூலம் விமான நிலையத்துக்குச் செல்வது அங்கிருந்து இந்தியாவுக்குள் சென்றுவிடுவது. இன்னும் முன்னெச்சரிக்கையாக தனது குடும்பத்தினரை இரு வாரங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டார் நஜிபுல்லா.
நஜீபுல்லா மற்றும் சில அதிகாரிகள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்ட கார்கள் விமான நிலையத்தை நெருங்கின. அப்போது சில வீரர்கள் கார்களை வழிமறித்துத் தடுத்தனர். அதன் பிறகுதான் அவர்கள் முஜாஹிதீன்களில் ஒரு பிரிவினர் என்பது தெரிந்தது.
வேறு வழியின்றி திரும்பிச் சென்ற நஜிபுல்லா, காபூலில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் வளாகத்தில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு இந்தியாவிடம் அடைக்கலம் கோரும் முயற்சிகள் தோல்வியடைந்தன. சுமார் நான்கரை ஆண்டுகள் அவர் அங்கேயே தங்கியிருந்தார்.
அப்போது உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து தலிபான்கள் வளர்ச்சியடைந்தனர். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தாலிபன்கள் காபூலை முழுமையாகக் கைப்பற்றினர். ஐக்கிய நாடுகள் அவையின் வளாகத்துக்குள் மாறுவேடத்தில் நுழைந்த தலிபான்கள் நஜிபுல்லாவைப் பிடித்து கடுமையாகச் சித்திரவதை செய்து கொன்றனர். பின்னர் ஒரு மின் கம்பத்தில் உடலைக் கட்டித் தொங்க விட்டனர்.
தலிபான்களின் நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்புகளில் கட்டாயம் இடம்பெறக்கூடிய அம்சம் இது. இதற்கு முன்னர் காபூலைக் கைப்பற்றியபோது தலிபான்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அதேபோன்று இப்போதும் நடக்கலாம் என்ற அச்சம் அஷ்ரப் கனிக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இப்போது கிடைத்திருக்கும் களத் தகவல்களின் அடிப்படையில் பெரிய எதிர்ப்புகள் ஏதுமின்றி தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியிருக்கின்றனர். ஒரு துப்பாக்கிக் குண்டை கூட வீணாக்காமலேயே பல பகுதிகள் தலிபான்களின் வசமாகியிருக்கின்றன. 1996 ஆம் ஆண்டைப் போல் அல்லாமல் ஓரளவு அமைதியாகவே காபூல் நகரம் இருப்பதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கனியின் இருப்பிடம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஓமான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், லெபனான் போன்ற நாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. இறுதியில் அவர் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அஷ்ரப் கனி யார்?
ஏழை நாடுகளை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றிப் படித்தவர் அஷ்ரப் கனி. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையாக உள்ள பஷ்துன் இனத்தைச் சேர்ந்தவர்.
2001 ல் அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிய அவர் ஹமீத் கர்சாய் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 2009 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த அவர், 2014 இல் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியானார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் களின் ஆட்சி நடக்க வாய்ப்பே இல்லை என சில மாதங்களுக்கு முன்புவரை அஷ்ரப் கனி கூறிவந்தார்.
அஷ்ரப் கனிக்கு மாத்திரமல்ல, நெருக்கடிகளால் வெளியேறிய பல உலகத் தலைவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் அளித்த நெடிய வரலாறு இருக்கிறது.
1990 களில் ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவியை இழந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ துபாயில் அடைக்கலமானார். பின்னர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பும் வரை அவர் அங்கு தங்கியிருந்தார்.
No comments:
Post a Comment