ஒரு கிலோ சீனியை 90 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய வாய்ப்பிருந்தும் அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது : நகைச்சுவைகளைக் கூறுகின்ற அரசாங்கமும் அமைச்சர்களுமே மக்களுக்கு கிடைத்திருக்கின்றார்கள் - ருவன் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

ஒரு கிலோ சீனியை 90 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய வாய்ப்பிருந்தும் அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றது : நகைச்சுவைகளைக் கூறுகின்ற அரசாங்கமும் அமைச்சர்களுமே மக்களுக்கு கிடைத்திருக்கின்றார்கள் - ருவன் விஜேவர்தன

(நா.தனுஜா)

எமது நாட்டிற்கு வருடாந்தம் 6 இலட்சம் மெற்ரிக் தொன் சீனி தேவைப்படுகின்றது. இருப்பினும் அதனை விடவும் இரு மடங்கு சீனியை இறக்குமதி செய்த வியாபாரிகள், தற்போது சீனிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக்கூறி அதன் விலையை அதிகரித்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு கிலோ கிராம் சீனியை 90 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய வாய்ப்பிருந்தும்கூட, அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால் அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் நன்மையடைகின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் திலைவர் ருவன் விஜேவர்தன சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுடன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திங்கட்கிழமை நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, சீனியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகின்ற அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திடமிருந்து நாட்டு மக்கள் எந்தவொரு நன்மையையும் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் டொலரின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு கிலோ கிராம் சீனியைத் தருவிக்கும் அதேவேளையில், இந்தியாவில் ஒரு கிலோ கிராம் சீனி 30 இந்திய ரூபாவை விடவும் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், எமது நாட்டில் ஒரு கிலோ கிராம் சீனியை 90 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.

மேலும் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவாறு சீனியின் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனியை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் என்பதனால், சீனியின் விலை அதிகரித்தாலும் பிரச்சினையில்லை என்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் கூறுகின்றார்கள். அரசாங்கம் சீனியின் பாவனையைக் குறைப்பதற்கான அதன் விலையை அதிகரித்திருக்கின்றது என்றால், மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரித்ததன் நோக்கம் என்ன? என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

எது எவ்வாறெனினும் பல்வேறு நகைச்சுவைகளைக் கூறுகின்ற அரசாங்கமும் அமைச்சர்களுமே நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கின்றார்கள். நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒரு கிலோ கிராம் சீனி 75 - 85 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் அது 130 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.

எமது நாட்டிற்கு வருடாந்தம் 6 இலட்சம் மெற்ரிக் தொன் சீனி தேவைப்படுகின்றது. இருப்பினும் அதனை விடவும் இரு மடங்கு சீனியை இறக்குமதி செய்த வியாபாரிகள், தற்போது சீனிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக்கூறி அதன் விலையை அதிகரித்திருக்கின்றார்கள். அதனை அரசாங்கம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலங்களில் எப்போதும் பொதுமக்களை பட்டினி என்ற நிலைக்குத் தள்ளியதில்லை. அனுபவம் இல்லாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதைத் தற்போது ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் நிரூபித்திருக்கின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களின் பக்கமே நின்றது. மாறாக ஒருபோதும் தத்தமது நலனை முன்னிறுத்தி செயற்படவில்லை. அதன் மூலம் எதிரணியினர் பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டாலும், அனுபவமின்மையினால் அவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை.

எனவே கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளல் ஆகியவை தொடர்பில் 21 விடயங்களை உள்ளடக்கி ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளைத் தற்போதேனும் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment