(எம்.மனோசித்ரா)
நாட்டினதும், நாட்டு மக்களினதும் உரிமையாளர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் இல்லை என்பதை இந்த அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பதிவாகும் ஒவ்வொரு உயிரிழப்புக்களும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டினதும், நாட்டு மக்களினதும் உரிமையாளர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் இல்லை என்பதை இந்த அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நாட்டினதும், நாட்டு மக்களினதும் தற்காலிக பொறுப்பாளர்கள் மாத்திரமே.
நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மக்களின் இறையாண்மை மூலமாகவே வாக்களிக்கப்படுகிறது. அந்த இறையாண்மையை மக்களின் நலனுக்காக உபயோகிக்கா விட்டால் மக்கள் அதனை தாமாகவே உபயோகிக்கத் தொடங்குவார்கள்.
கொவிட் தொற்றால் நாளாந்தம் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி மதத் தலைவர்களும், விசேட வைத்திய நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கத்திற்கு இப்போதுதான் நாளாந்த தொழிலாளர்கள் மீது அக்கறை ஏற்பட்டுள்ளது.
பியகம தொழிற்சாலையில் 880 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டமையின் காரணமாக பணவீக்கம் அதிகரித்து அதனால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையால் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் இந்த அரசாங்கத்தின் கண்களுக்கு புலப்படவில்லை.
வருமானமற்ற 7 மில்லியன் மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு 35 பில்லியன் மாத்திரமே செலவாகும். ஆனால் நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி என்ன என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் தமது சகாக்களுக்கு 800 பில்லியன் ரூபாய் வரிச் சலுகையை இந்த அரசாங்கமே வழங்கியது. அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானமே இவ்வாறு ஏனையோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சகாக்களுக்கு 800 பில்லியன் ரூபாவை வழங்கிய அரசாங்கம் வருமானமற்ற மக்களுக்கு 35 பில்லியன் ரூபாவினை வழங்க முடியாமல்தான் நாட்டை முடக்காமலுள்ளது. அத்தோடு நாட்டில் பாரிய டொலர் பற்றாக்குறையும் நிலவுகிறது. கொவிட் தொற்றால் நாட்டை முடக்குவதற்கும் டொலர் பற்றாக்குறைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
தற்போது எமது நாட்டின் கடன் சுமை 16.3 ட்ரில்லியன்கள் உயர்வடைந்துள்ளது. எவ்வித முக்கியத்துவமுமற்ற வேலைத்திட்டங்களுக்காக கடந்த இரு ஆண்டுகளில் மாத்திரம் 3.2 ட்ரில்லியன்கள் கடன் பெற்றப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் அதன் சகாக்களுக்கு வழங்கியுள்ள வரிச்ச லுகையை இரத்து செய்ய வேண்டும்.
வெளிநாட்டு கடன்களை மீளப் செலுத்துவதற்கு மீள்புதுப்பித்தலை செய்தால் எம்மால் சுவாசிக்க முடியும். தற்போது இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கோ அல்லது உலக வங்கிக்கோ செல்ல முடியாது. மனித உரிமைகளை மதிக்காமை மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமை என்பனவே இதற்கான காரணமாகும்.
எனவே உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதமாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பலியாகும் ஒவ்வொரு உயிருக்கும் இந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சுகாதார ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்தால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக சரிவடையும்.
எனவே எதிர்க்கட்சியினர் கூறுவதை கேட்க வேண்டியதில்லை. மதத் தலைவர்களும், ஆளுந்தரப்பிலுள்ள பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும், விசேட வைத்திய நிபுணர்களும் கூறுவதைக் கேட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது. இதற்காக நாம் சதித்திட்டங்கள் எவற்றையும் செய்யவில்லை. தேர்தல் ஊடாக ஜனநாயக ரீதியில் அதனை எம்மால் செய்து கொள்ள முடியும். ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தினால் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளமை பொய்யாகும். அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் நன்கு தெரிந்து கொண்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment