இலங்கையில் 45 ஆயிரத்து 831 சிறார்களுக்கு கொரோனா, 14 பேர் மரணம் - சுகாதார அமைச்சர் பவித்திரா - News View

About Us

About Us

Breaking

Thursday, August 5, 2021

இலங்கையில் 45 ஆயிரத்து 831 சிறார்களுக்கு கொரோனா, 14 பேர் மரணம் - சுகாதார அமைச்சர் பவித்திரா

இலங்கையில் கடந்த 10 நாட்களில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளான 21,344 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 591 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 45,831 சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 பேர் மரணமடைந்தும் உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட் தொற்று நிலவரம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு நேற்று வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரத்திற்குள் உலகளாவிய ரீதியிலும் மற்றும் தெற்காசிய வலயத்திற்கும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு சமாந்திரமாக இலங்கையிலும் நோயாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. 

இதற்கு முன்னரான வாரங்களில் 1,000 முதல் 1,500 வரையிலான தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்குள் அந்த எண்ணிக்கை 2,000 முதல் 2,500 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையின் சனத் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 86 வீதமானோருக்கு ஏதேனும் ஒரு தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 வீதமானோருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மாதங்களுக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தடுப்பூசியாவது ஏற்றப்பட்டு விடும்.

கடந்த 10 நாட்களில் (ஜுலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரை) நாட்டில் 21,344 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்தத் தொற்றால் 591 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 79 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜுலை 23 ஆம் திகதி 23,804 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்ற நிலையில் அந்த எண்ணிக்கை ஆகஸ்ட் முதலாம் திகதி 30,017 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது 164 நோயாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தற்போது அனைத்து பிரிவுகளிலும் 186 தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் உள்ளன. அத்துடன் அரச வைத்தியசாலைகளில் தேவையான ஒட்சிசனும் உள்ளன. தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்றக் கூடிய வகையில் அதனை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொவிட்19 தொற்றால் 45,831 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 26,143 சிறுவர்களும், 10 வயதுக்கு குறைந்த 19,688 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

அத்துடன் 14 சிறுவர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 02 பேரும், 11 முதல் 05 வயதுக்கு இடைப்பட்ட 02 பேரும், 06 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட 3 பேரும் 5 வயதுக்கு குறைவான 07 பேரும் அடங்குகின்றனர்.

ஷம்ஸ் பாஹிம் சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment