ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களும், பொறுப்புக்கூற வேண்டியவர்களும் ஒருபோதும் தப்பிக்க முடியாது : மைத்திரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனை - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களும், பொறுப்புக்கூற வேண்டியவர்களும் ஒருபோதும் தப்பிக்க முடியாது : மைத்திரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனை - சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பத்துவடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை பெறப்பட்ட வண்ணம் உள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களும், பொறுப்புக்கூற வேண்டியவர்களும் ஒருபோதும் தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுப் பெற்ற) சரத் வீரசேகர அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 28 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. இக்குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 723 பேர் கைது செய்யப்பட்டனர். 87 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 224 பேர் விளக்கமறியலில் உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 226 பேர் பிணையில் உள்ளார்கள் அத்துடன் 172 பேர் விசாரணைகளை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்றது. இதற்கு முன்னர் வனாத்தவில்லு சம்பவம், மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவம் என பல சம்பங்கள் இடம் பெற்றுள்ளன.

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேருக்கும், வனாத்தவில்லு சம்பவத்துடன் தொடர்புடைய 06 பேருக்கும் எதிராக இரண்டு மாதத்திற்கு முன்னர் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன்னர் 25 பேருக்கு எதிராக 23,270 குற்றங்களுக்கு கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக வவுனதீவு பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை வெட்டி கொலை செய்தமை தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெரும்பாலானோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா ? அரசியலமைப்பின் 35 கீழ் 1 அத்தியாயத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றன.

இந்த அத்தியாயத்தை தெளிவுப்படுத்தினால் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் பதவி வகிக்கும் காலத்தில் தனிப்பட்ட ரீதியிலும், உத்தியோகப்பூர்வமாக செய்த விடயங்களுக்கு எதிராக எந்நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

இதனால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் தொடர்ந்து ஆலோசனை பெற்று வருகிறோம்.

பிரதான குற்றச்சாட்டுகளுக்கு அமையவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். விசேடமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும்.

மனித படுகொலை, கொலைக்கு ஆதரவு வழங்கல், சூழ்ச்சி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். இதற்கு மேலதிகமாக மதவாத முரண்பாடுகள், மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பிலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும்.

பொறுப்புக்களை மீறியமைக்காக அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு முன்னர் பாராளுமன்ற தெரிவு குழு நியமிக்கப்பட்டது. இவையனைத்தினதும் சாட்சிகளுக்கு அமையவே குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்.

குண்டுத் தாக்குதலில் பிரதான சந்தேக நபராக நௌபர் மௌலவி உள்ளார். முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் கருத்து தொடர்பில் சந்தேகத்தன்மையும், தெளிவற்றதன்மையும் காணப்படுகிறது. இவர்தான் 2019 மே மாதம் தொடக்கம் 2021 மே மாதம் 25 ஆம் திகதி வரை சட்டமா அதிபராக சேவையாற்றினார்.

ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய கருத்தை குறிப்பிட்டமை ஆச்சரியத்திற்குரியது. அதிகம் பலம் கொண்டவராக சட்டமா அதிபர் உள்ளார். அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குவது சட்டமா அதிபரின் பொறுப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் இடம்பெற்ற பொறுப்பற்ற செயற்பாட்டினால் கத்தோலிக்க மக்களினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தற்போதும் கைது செய்யப்படுகிறார்கள். எவரும் தப்பிப்பதற்கு இடமளிக்க முடியாது.

No comments:

Post a Comment