இலங்கையினால் கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ள மேலும் 2 மில்லியன் Sinopharm கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் நாளை (28) வந்தடையவுள்ளன.
அத்துடன் இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 3 இலட்சம் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் நாளை (28) இலங்கையை வந்தடையவுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பாதுகாப்பு படையினருக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சினால் இந்த தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சரின் மேற்படி விஜயத்தின்போது இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் பெரும் பங்கு வகிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கமையவே இந்தத் தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்தத் தடுப்பூசிகள் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள், போரின் போது உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் மனைவிமார்கள், படை வீரர்களின் கீழ் தங்கி வாழ்வோர் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
சீன மக்கள் குடியரசினால் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ ஒத்துழைப்பின் கீழ் வழங்கப்படவுள்ள மேற்படி ஒரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடையும் தடுப்பூசி தொகுதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளரிடம் சீன தூதரக அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சீனாவிடமிருந்து இலவசமாக 2.7 மில்லியன் டோஸ்கள் உள்ளிட்ட 15.7 மில்லியன் (1.57 கோடி) Sinopharm தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, நாளை கிடைக்கவுள்ள 2.3 மில்லியன் டோஸ் தடுப்பூசி டோஸ்களுடன் மொத்தமாக 18 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் சீனாவிலிருந்து பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 7 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசி டோஸ்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலவசமாக கிடைத்தவை (2.7 மில்.)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்லியன்)
மே 25 - 500,000 (0.5 மில்லியன்)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்லியன்)
கொள்வனவு செய்யப்பட்டவை (13 மில்.)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment