டோக்கியோவில் பயணிகள் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் படுகாயம் : சந்தேக நபர் கைது - News View

Breaking

Saturday, August 7, 2021

டோக்கியோவில் பயணிகள் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் படுகாயம் : சந்தேக நபர் கைது

32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.

ஜப்பானின் மேற்கு நகரில் உள்ள செடாகயா வார்டு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது, ரயிலில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கத்தியால் கண்மூடித்தனமாக சக பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உட்பட மொத்தம் 10 பேர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்திக்குத்து தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கத்தியும் செல்போனும் கைப்பற்றப்பட்டது. சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்திய நபரையும் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கத்திக்குத்து தாக்குதல் நடந்த இடமானது ஒலிம்பிக் தொடரின் குதிரையேற்றம் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு சில மைல் தூரங்களில்தான் அமைந்துள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad