வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் நாட்டுக்கு பலம் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் நாட்டுக்கு பலம் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

மிக நீண்ட காலமாக வெறும் வாய்ப் பேச்சிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த பிராந்திய அலுவலக தேவையை குருநாகல் மாவட்டத்தில் பூர்த்தி செய்ய முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் குருநாகல் பிராந்திய அலுவலகம் (27) திறந்து வைக்கப்பட்டது. நிகழ்விற்கு அலரி மாளிகையில் இருந்தவாறு இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேரடியாக இணைந்து கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

குருணாகல் பிராந்திய அலுவலகத்தின் நினைவு பலகை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் இணைய காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடமேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது எமக்கு தெரியும். இதன் தேவையை இவர்கள் பல காலமாக சுட்டிக்காட்டியிருந்த போதிலும் இதனை நிறுவுவதற்கு எவரும் முன்வரவில்லை.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அந்த தேவையை உணர்ந்தோம். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக வடமேல் மாகாண மக்கள் மட்டுமின்றி அதனை சூழவுள்ள அனைத்து மக்களும் நன்மையடைவார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நாம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

அவர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்வது சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. தமது குடும்பத்தை வலப்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காகவாகும். அவர்கள் நாட்டிற்கு பாராமாக அன்றி நாட்டிற்கு பலமாக இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்.

அவர்களுக்கு அவர்கள் உள்ள நாடுகளிலும், வேலைத்தளங்களிலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் அறிவோம். சிலவேளைகளில் அந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் பிறப்புச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த விடயங்களை விரைவாகச் சரிசெய்ய செய்ய வேண்டியிருக்கும் போது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அல்லது திடீர் மரணங்கள் சம்பவிக்கும் நிச்சயமாக தூதரகத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமாத்திரமன்றி வேலை வாய்ப்பிற்காக அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அறியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் ஒரே இடம் தூதர அலுவலகமாகும்.

இன்றுவரை இந்த அனைத்து செயற்பாட்டிற்காகவும் கொழும்பிற்கு செல்ல வேண்டி இருந்தது. நாட்டின் பெரும்பாலானவர்கள் இத்தேவைக்காக கொழும்பிற்கு வருவதால் சில சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் செல்லும். அதற்காக கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பணம் செலவாகும்.

ஆனால் வடக்கு, தெற்கு மக்களுக்கு அப்பிரச்சினை இல்லை. ஏனெனில் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் தூதரகங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்து தொடர்பிலும் சிந்தித்தே நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வடமேல் மாகாணத்தில் தூதரகமொன்றை திறக்க தீர்மானித்தோம். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக எமக்கு மக்களின் தேவைகளை இலகுபடுத்த முடியும்.

கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுத்துவரும் அதேவேளையிலேயே நாம் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

No comments:

Post a Comment