ரணில் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வார வேண்டாம், அவரது அரசியல் வரலாறு காலகாலமும் இவ்வாறே அமைந்துள்ளது - சரத் பொன்சேகா - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 21, 2021

ரணில் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வார வேண்டாம், அவரது அரசியல் வரலாறு காலகாலமும் இவ்வாறே அமைந்துள்ளது - சரத் பொன்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பல நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அதனை குழப்பும் நடவடிக்கைகளை எடுக்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேண்டுமானால் தனியாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவருக்கு தேவையான திருத்தங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்படலாம், ஆனால் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வார வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலையை அதிகரித்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா, முடியுமா என்பது எமக்கு தெரியவில்லை. எரிபொருள் நெருக்கடி நிலைமைகளை கையாள எமது விலை சூத்திரத்தை பயன்படுத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அதேபோல் வலுசக்தி அமைச்சர் பொய்களை கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார். பின்னர் அழகான சிரிப்பால் அவற்றை மூடி மறைக்க முயற்சிக்கின்றார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எரிபொருள் களஞ்சிய குதங்களை இந்தியா எமக்கு வழங்க தயாராக இருந்த நிலையில் அதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த நிலையில் அதனையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த தவறுகளே நாம் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள காரணமாகும்.

மேலும் தேசிய வளங்களை விற்க மாட்டோம் என கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று எரிபொருள் நிலையங்களையும் சர்வதேச நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிய வருகின்றது.

இவ்வாறான பல நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க அதனை குழப்பும் நடவடிக்கைகளை எடுக்கின்றார். அவரது அரசியல் வரலாறு காலகாலமும் இவ்வாறே அமைந்துள்ளது. தனது கட்சிக்குள் இருக்கும் நபர்களில் காலை வாரும் செயற்பாடுகளையும், தலையை தடவி குட்டுவதுமே செய்து வருகின்றார்.

எதிர்க்கட்சியின் சார்பில் அவருக்கு நேரம் ஒதுக்கவும் இல்லை, ஆளுங்கட்சியின் நேரத்தை பெற்றுக் கொண்டு இங்கு வந்து, அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக மட்டுமல்லாது முழு அரசாங்கத்திற்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர வேண்டும் என கூறுகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேண்டுமானால் தனியாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவருக்கு தேவையான திருத்தங்களை உள்வாங்கிக் கொண்டு செயற்படலாம், ஆனால் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வார வேண்டம்.

பஷில் ராஜபக்ஷவை பொறுத்தவரை அவர் எனது வகுப்பு நண்பர். அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு பல்வேறு விதத்தில் புகழ் பாடப்பட்டது. அவர் வந்தால் எரிபொருள் விலை குறையும் என நானும் நினைத்தேன், அவர் நல்லதொரு பொருளாதார முகாமைத்துவ திறமைசாலி என்ற ரீதியில் அவரை எதிர்பார்த்தேன். ஆனால் அவரும் நெருக்கடிக்குள் உள்ளார். இன்று நாட்டில் பல்வேறு துறையினர் பாரிய நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad