முகக்கவசம் அணியாதோர் தொடர்பில் நாளை முதல் விசேட கண்காணிப்புக்கள் என்கிறார் அஜித் ரோஹண - News View

Breaking

Sunday, July 25, 2021

முகக்கவசம் அணியாதோர் தொடர்பில் நாளை முதல் விசேட கண்காணிப்புக்கள் என்கிறார் அஜித் ரோஹண

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் நாளை திங்கட்கிழமை முதல் முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக முகக்கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 149 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 52,000 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 46,000 இற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,000 பேருக்கு எதிராக எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தனிமைப்படுத்தல் தொடர்பான கண்காணிப்புக்கள் தொடர்ந்தும் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 13 இடங்களில் 4,120 வாகனங்களில் பயணித்த 7,644 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 99 வாகனங்களில் பயணித்த 150 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment