(எம்.மனோசித்ரா)
சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் அண்மைக் காலமாக அரசியல் ரீதியாகவும், உயர் பொலிஸ் அதிகாரிகளாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன நேற்று ஞாயிறுக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களும், சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும் கடந்த காலங்களில் இராஜதந்திர ரீதியிலும் உயர் பொலிஸ் அதிகரிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்கு கடந்த காலங்களில் முன்னின்று செயற்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் செயற்படுவோம்.
ஊடகவியலாளர்களை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கும் குற்றவியல் சட்டத்தை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபட்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை பலரும் தற்போது மறந்து விட்டனர்.
எவ்வாறிருப்பினும் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் அதற்கான உரிமையை ஸ்திரப்படுத்துவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும். எனவே தற்போது ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கடும் கண்டனத்தை வெளியிடுகிறது.
சுதந்திரமாக கருத்து வெளியிட்டு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள ஊடகவியலாளர்கள் பட்டியலில் தற்போது சமூக வலைத்தள ஊடகவியலாளர் தரிந்து எரங்க ஜயவர்தனவும் இணைந்துள்ளார். கடந்த முதலாம் திகதி சமூக வலைத்தள்ளத்தில் அவர் பகிர்ந்திருந்த செய்திக்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்திருந்த பதில், ஒரு உயர் பொலிஸ் அதிகாரி வழங்கக்கூடிய பதில் அல்ல என்பது எமது நிலைப்பாடாகும்.
இதன் மூலம் குறித்த ஊடகவியலாளருக்கு காணப்படுகின்ற சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமைக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
குறித்த ஊடகவியலாளர் தவறான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தால் அது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கவோ முடியும். மாறாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவதானது கீழ் மட்டத்திலுள்ள பொலிஸாரும் இவ்வாறு செயற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறின்றி ஊடகவியலாளர்களின் குரலை முடக்க முயற்சித்தால் நாம் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் இவ்விடயம் தொடர்பில் முறையான பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
மேலும் சகல ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினுடையது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அளித்துள்ள முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்கவிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment