டெல்டா வைரசால் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரிக்கும் : குறிப்பாக தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் - News View

Breaking

Wednesday, July 14, 2021

டெல்டா வைரசால் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரிக்கும் : குறிப்பாக தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும்

டெல்டா வகை வரைஸ் மாறுபாடுகளுடன் அதிகரித்த பரிமாற்ற தன்மை, சுகாதார அமைப்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான வாராந்திர அறிக்கையை நேற்று முன்தினம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.

அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...!

* உலக சுகாதார அமைப்பின் பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதற்கு காரணம், டெல்டா வைரஸ்தான்.

* 13ஆம் திகதி நிலவரப்படி டெல்டா வைரஸ், 111 நாடுகளில் பரவி உள்ளது. இது தொடர்ந்து கணிசமாக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரசாக இருக்கும்.

* டெல்டா வகை வரைஸ் மாறுபாடுகளுடன் அதிகரித்த பரிமாற்ற தன்மை, சுகாதார அமைப்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

* ஆல்பா வகை வைரஸ் 178 நாடுகளில் பரவி இருக்கிறது. 123 நாடுகளில் பீட்டா வைரசும், 75 நாடுகளில் காமா வைரசும் பரவி உள்ளன.

* கவலைக்குரிய வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ்கள்தான் அதிகமாக பரவுகின்ற தன்மையைக் கொண்டுள்ளன. இதனால்தான் வரும் மாதங்களில் இந்த வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளில் தளர்வு மற்றும் கொரோனா காலத்திற்கான பொருத்தமான நடத்தைகளை பின்பற்றாமை மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தல், தடுப்பூசிகளை கலந்து போடுதல், தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் மக்கள் தொகை குறைவு ஆகியவற்றால் மேலும் பரவல் அதிகரிக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை, இறப்பு பல நாடுகளில் அதிகரித்துள்ளது.

* 11ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில் உலகளவில் புதிதாக 30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

* 9 வாரங்கள் தொடர் சரிவுக்கு பின்னர் இறப்பு இந்த வாரம் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இறப்பு 3 சதவீதம் அதிகம். 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

* உலகளவில் ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். முந்தைய வாரத்தில் இது 3.70 லட்சமாக இருந்தது. இதுவரை உலகம் முழுவதும் 18 கோடியே 60 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் முதன் முதலாக இந்தியாவில்தான் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment