போதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர் - சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்குப் பின்னால் அரசாங்கம் ஒழிந்து கொள்ள முயற்சி : மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

போதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர் - சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்குப் பின்னால் அரசாங்கம் ஒழிந்து கொள்ள முயற்சி : மனோ கணேசன்

(நா.தனுஜா

அண்மையில் இடம்பெற்ற ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்குப் பின்னால் அரசாங்கம் ஒழிந்து கொள்ள முயற்சிக்கின்றது. ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. போதியளவு ஊதியமின்மையினால் மலையகத்தில் அதிகரித்து வரும் வறுமையின் காரணமாகவே அங்குள்ள பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எனவே இது குறித்து அரசாங்கம் உடனடியாகத் தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, 1000 ரூபாவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மலையகத்தில் நிலவும் வறுமையின் காரணமாகவே அங்கிருப்பவர்கள் வேலை வாய்ப்பைத்தேடி கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அண்மையில் ஹிஷாலினி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னால் தற்போது அரசாங்கம் ஒழிந்து கொண்டிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி, பிரதமர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் உள்ளிட்ட அனைவராலும் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை மறுபுறம் தோட்டப் பெண்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் நிறையைத் தோட்டக் கம்பனிகள் நிர்ணயிக்கின்றன. எனவே அவ்வாறு நிர்ணயிக்கப்படும் நிறையிலிருந்து ஒரு கிலோ கொழுந்து குறைவடைந்தாலும் கூட, அவர்களுக்கான சம்பளம் குறைகின்றது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வறுமைநிலை காணப்படுகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய மிகச் சொற்ப சம்பளம் கூட ஒழுங்காக வழங்கப்படாமையினால் அங்கு வறுமை மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

எனவே அரசாங்கம் இப்பிரச்சினை தொடர்பில் உடனடியாகத் தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment