மூன்று குழுக்களைத் தவிர வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்தவோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ பரிந்துரைகள் வழங்கப்படாது - பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Wednesday, July 14, 2021

மூன்று குழுக்களைத் தவிர வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்தவோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ பரிந்துரைகள் வழங்கப்படாது - பொது சுகாதார அதிகாரிகள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கும் பிரதான 3 குழுக்களைத் தவிர, வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்த அல்லது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துவதற்கான பரிந்துரைகளை பொது சுகாதார அதிகாரிகள் வழங்காது என இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கமையவே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு திறக்கப்படுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதான ஆர்ப்பாட்டங்கள் இரண்டு இடம்பெற்றிருந்தன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கொம்பனி தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தது. அதேபோன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்யதிருந்தனர். அவர்கள் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்பாக கொம்பனி தெரு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்க கொம்பனி தெரு பிரதேச பொது சுகாதார அதிகாரி பரிந்துரை செய்திருக்கின்றார். என்றாலும் அந்த இடத்தில் பொது சுகாதார அதிகாரிகள் எந்தவகையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்க தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவும் தனிமைப்படுத்தவும் தேவையான பரிந்துரையை பத்தரமுல்ல சுகாதார அதிகாரியின் ஆலாேசனைக்கமைய பத்தரமுல்ல பொது சுகாதார அதிகாரி செய்திருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எவ்வாறு இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களினாலும் சட்டம் மற்றும் ஒழுக்க பிரச்சினை ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம் நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம். 

என்றாலும் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் ஆலாேசனை வழங்கப்பட்டிருக்கும் பிரதான 3 குழுக்களை தவிர, வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்தவோ அல்லது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவோ எந்தவித பரிந்துரையையும் பொலிஸ் திணைக்களத்துக்கோ அல்லது வேறு திணைக்களங்களுக்கோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அனைத்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கின்றோம்.

அத்துடன் ஏதாவது சட்ட மீறல்கள் ஏற்படுமாக இருந்தால், அது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொது சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment