பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால் கல்வியமைச்சின் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால் கல்வியமைச்சின் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

கல்வியமைச்சுடன் இணைந்து அமைச்சின் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் இது பற்றிய தெளிவுபடுத்தலை வழங்கினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றும் அதேவேளை, தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் தரப்பினர் தொடக்கம் முன்னுரிமைப்பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு நாட்டை முடக்கி வைக்க முடியாது. அதுமாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது. அதன்படி கல்வியமைச்சுடன் இணைந்து கல்வியமைச்சின் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை நாம் இன்று ஆரம்பித்திருக்கிறோம்.

அதன்படி நாட்டின் தடுப்பூசிக் கையிருப்பிற்கு அமைவாக நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலை ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் படிப்படியாகத் தடுப்பூசி வழங்கப்படும் அதேவேளை, அதன் மூலம் படிப்படியாக பாடசாலைகளை மீளத்திறக்க முடியும்.

அதேபோன்று எமது நாட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாடுகள் சிலவற்றில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் காலத்தில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது குறித்த செயற்திட்டத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு படிப்படியாக நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாப்புப் பெற்ற நாடாக இலங்கையை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment