கடன் வழங்கல் வசதி வீதத்தினை தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானம் - இலங்கை மத்திய வங்கி - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

கடன் வழங்கல் வசதி வீதத்தினை தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானம் - இலங்கை மத்திய வங்கி

(நா.தனுஜா)

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் என்ற அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் என்ற அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் பின்னர் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் 2021 முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இன்னமும் வெளியிடப்படாத போதிலும், பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய துறைகளுக்கான குறிகாட்டிகள் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதையும் விட வலுவாளதொரு மீட்சியைக் காண்பிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலை மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டுப் பொருளாதார செயற்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் 2021 இரண்டாம் காலாண்டின் போதான மீட்சியை ஓரளவிற்கு நலிவடையச்செய்தன.

இருப்பினும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாரத்தில் ஏற்பட்ட தாக்கம் ஓரளவிற்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனூடாக 2021 ஆம் ஆண்டில் அடையக்கூடிய சுமார் 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது, நீண்டகால அடிப்படையில் நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார மீட்சியொன்றுக்கு வழிவகுக்கும்.

வர்த்தகப் பற்றாக்குறை நிலைமையைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டின் அதேகாலப் பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜனவரி - மே மாதம் வரையிலான காலப் பகுதியில் மேலும் விரிவடைந்திருந்தது.

அது மாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் சுற்றுலாத் துறையின் மீட்சியில் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad