நாட்டை எப்போதும் முழுமையாக முடக்கி வைத்திருக்க முடியாது, செப்டெம்பர் மாதமளவில் முழுமையாகத் திறக்க நடவடிக்கை - இராணுவத் தளபதி - News View

Breaking

Wednesday, July 14, 2021

நாட்டை எப்போதும் முழுமையாக முடக்கி வைத்திருக்க முடியாது, செப்டெம்பர் மாதமளவில் முழுமையாகத் திறக்க நடவடிக்கை - இராணுவத் தளபதி

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் தீவிரமடையாதபட்சத்தில், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான தேசிய மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 முதலாம் கட்டத் தடுப்பூசி வழங்கி முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை எப்போதும் முழுமையாக முடக்கி வைத்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜெனரல் சவேந்திர சில்வா, உரிய பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எமது நாட்டிற்குள் வெளிநாட்டுப் பிரஜைகள் வருகை தருவதை அனுமதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த நடவடிக்கைகள் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் கொவிட்-19 முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படைகளினதும் மருத்துவப்பிரிவினால் அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment