‘தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றும் சாத்தியம்’ என்கிறார் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி - News View

Breaking

Friday, July 23, 2021

‘தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றும் சாத்தியம்’ என்கிறார் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி

ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் மூலோபாய ரீதியில் முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் நாட்டின் பாதி கிராமப்பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் தொகை உள்ள நகர மையங்களின் தொடர்புகளை துண்டித்திருப்பதாகவும் அமெரிக்காவின் இராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘அப்கான் மக்கள், ஆப்கான் பாதுகாப்பு படைகள் மற்றும் ஆப்கான் அரசின் தலைமைத்துவத்திற்கு இது பெரும் சோதனையாக உள்ளது’ என்று கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் மார்க் மில்லி, பெண்டகனில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் 419 மாவட்டங்களில் சுமார் பாதி அளவு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு 34 மாகாணத் தலைநகரங்களில் 17 இன் புறநகர்களில் இருந்து தலிபான்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். எனினும் இன்னும் எந்த ஒரு தலைநகரையும் கைப்பற்றவில்லை என்று அமெரிக்க இராணுவ ஜெனரல் தெரிவித்தார்.

‘அவர்கள் இப்போது செய்வது மக்கள் தொகை கொண்ட நகர மையங்களை தனிமைப்பத்துகிறார்கள். காபுலிலும் அதனையே செய்வதற்கு அவர்கள் முயல்கின்றனர்’ என்று மில்லி தெரிவித்தார்.

இதற்கு பதில் நடவடிக்கையாக ஆப்கான் அரச படை மக்கள் தொகை கொண்ட நகர மையங்களை பாதுகாப்பதற்கு படைகளை குவித்திருக்கும் நிலையில் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு பின்னர் மோதல் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் டோஹாவில் சந்தித்த ஆப்கான் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு தவறினர். போர் களத்தில் தலிபான்கள் முன்னேற்றம் கண்டிருப்பது அவர்கள் வெற்றி பெறுவதான ஒரு கருத்தை உருவாக்கி உள்ளதாகவும் அமெரிக்க இராணுவ ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு முன்னதாக அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து முற்றாக வெளியேறுவது பற்றி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

அதன்படி அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறும் செயற்பாடு தற்போது வேகம் பெற்றிருப்பதோடு அந்தப் படைகள் ஓகஸ்ட் முடிவில் வெளியேற வாய்ப்பு உள்ளது. 

வெளிநாட்டு படைகள் வெளியேறுவதற்கு மாற்றாகவே, மேற்குல ஆதரவு பெற்ற ஆப்கான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் இணங்கினர். ஆப்கானில் அல் கொய்தா அல்லது ஏனைய போராட்டக் குழுக்கள் நிலை கொள்வதை தடுப்பதாக தலிபான்கள் இணங்கியுள்ளனர்.

‘பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட சாத்தியம் உள்ளது. அந்த செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுகிறது. தலிபான்கள் முழுமையாக (ஆப்கானை) கைப்பற்றும் சாத்தியமும் உள்ளது. நாடு பிளவுபடல், போர்ச் சூழல் போன்ற மேலும் பல சாத்தியங்கள் இதில் உள்ளன’ என்று ஜெனரல் மார்க் மில்லி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment