இலங்கையில் கல்வியையும் விற்பனை செய்யும் நோக்கிலேயே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் : முன்னிலை சோசலிச கட்சி கொழும்பில் ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

இலங்கையில் கல்வியையும் விற்பனை செய்யும் நோக்கிலேயே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் : முன்னிலை சோசலிச கட்சி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கல்வியையும் விற்பனை செய்யும் நோக்கிலேயே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னிலை சோசலிச கட்சியினரால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாக எம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் கொவிட் தொற்றுக்கு மத்தியில் யாரும் அறியாத வகையில் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வைரஸ் பரவலைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிக்கிறது. அரசாங்கம் அதன் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்குமாயின் அதற்கு எதிராக எமது போராட்டங்களும் தொடரும்.

கல்வியை விற்பதற்காகவே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பார்களாயின் கடந்த அரசாங்கத்திற்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

மியன்மாரைப் போன்று இலங்கையும் இராணுவ ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக சகலரும் இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad