திஸ்ஸமஹாராம வாவியில் சீனர்களைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகின்றதா? - வருண லியனகே - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

திஸ்ஸமஹாராம வாவியில் சீனர்களைப் பயன்படுத்தி மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகின்றதா? - வருண லியனகே

(நா.தனுஜா)

திஸ்ஸமஹாராம வாவி சுத்திகரிப்புப் பணிகளில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த சீருடையணிந்த குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் சர்ச்சைகள் வெடித்திருந்தன. இந்நிலையில் அங்கு வாவி சுத்திகரிப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அடிப்படையாக் கொண்டு நோக்குகையில், சீனர்களைப் பயன்படுத்தி அங்கு மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கவுள்ள சட்ட மூலம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது நாட்டிலுள்ள வணிகர்கள் முறையற்ற விதத்தில் சம்பாதித்த பணத்தில் (கறுப்புப் பணம்) நூற்றுக்கு ஒரு சதவீதத்தைப் பெற்றுக் கொண்டு, அதனைக் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் மாற்றயமைப்பது தொடர்பான சட்டமூலமே அதுவாகும்.

அமைச்சர் பந்துல குணவர்தன அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்திற்குத் தீங்கேற்படுத்தும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றார். அதேபோன்று இவ்வருடத்திற்கான வரவு, செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒரு சதவீதம் மாத்திரம் வரி அறவிடும் யோசனையையும் முன்வைத்திருந்தார்.

தற்போதைய அரசாங்கம் எமது நாட்டிலுள்ள வர்த்தகர்களுக்கும் பிறநாடுகளிலுள்ள வர்த்தகர்களுக்கும் எமது நாட்டில் இருந்து கொண்டு பிற நாடுகளில் முதலீடு செய்பவர்களுக்கும் அவசியமான வசதி வாய்ப்புக்களையும் சலுகைகளையும் வழங்குகின்றதே தவிர, உள்நாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் அண்மையில் திஸ்ஸமஹாராம வாவி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. அதாவது திஸ்ஸமஹாராம வாவி சுத்திகரிப்புப் பணிகளில் சீன இராணுவத்தின் சீருடையை ஒத்த சீருடையணிந்த குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையுடன் தொடர்புடைய விதத்திலேயே பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அங்கு வாவி சுத்திகரிப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக் கொண்டு நோக்குகையில், சீனர்களைப் பயன்படுத்தி அங்கு மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம வாவியை சுத்திகரிப்பதற்கு வேற்று நாட்டவர்களைக் கொண்டுவரத் தேவையில்லை. இரத்தினபுரி மாவட்டத்தில் பெருமளவான மாணிக்கக்கல் வியாபாரிகள் இருக்கின்றார்கள். தேவையேற்படும் பட்சத்தில் வாவியின் சுத்திகரிப்புப் பணிகளுக்கு அவர்கள் உதவிகளை வழங்குவார்கள்.

எனவே இப்போது வாவி சுத்திரகரிப்பு என்ற பெயரில் இடம்பெறும் நடவடிக்கைகள் அங்கு மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெறக் கூடும் என்ற சந்தேகத்தையே இரத்தினபுரி மாவட்ட மக்கள் மத்தியிலும் தோற்றுவித்திருக்கிறது. பொய்களைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment