யாழில் பெற்றோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

யாழில் பெற்றோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம், கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர்.

இதன்போது கடையில் இருந்த புடவைகள் மற்றும் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் உட்பட பல இலட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் கைக்கூலிகள் மூலம் வைத்து செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த கடைக்கும் எதிரில் இன்னொரு புடவைக்கடை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தீ மூட்டப்பட்ட கடையின் உரிமையாளர் குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் எதிர்க்கடை வியாபாரியுடன் மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்த குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad