உயர் கல்வியை இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்கிறார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

உயர் கல்வியை இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்கிறார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழே செயற்படுகின்றது. மாறாக இது உயர் கல்வியை இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்றது அல்ல. இதற்கு விசேட தனித்துவமான அம்சங்கள் இருக்க வேண்டும். அதற்காகத்தான் இதற்கு விசேட சட்ட மூலம் கொண்டுவந்திருக்கின்றது.

குறிப்பாக நாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர்களுக்கு பட்டம் வழங்கும் தாதியர் கல்லூரி இதுவும் பல்கலைக்கழகம். இவற்றுக்கு விசேட தனித்துவம் இருக்க வேண்டும். சாதாரண பல்கலைக்கழங்களில் மேற்கொள்வதை இங்கே மேற்கொள்ள முடியாது. இவற்றுக்கிடையில் பாரிய வித்தியாசம் இருக்கின்றது.

மேலும் எமது அரசாங்கம் 10 நகர பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டிருக்கின்றது. இவை சாதாரண பல்கலைக்கழங்களுக்கு மாற்றமானவை. நாட்டில் இருக்கும் பெளத்த பாலி பல்கலைக்கழகம், தொழிநுட்ப பல்கலைக்கழகம் என பல இருக்கின்றன. இவை அனைத்தும் விசேட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.

இதன் மூலம் இந்த பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படுவதில்லை என அர்த்தப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழங்களும் மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு கீழே செயற்படுகின்றன. அந்த விடயங்கள் அவ்வாறே இருக்கின்றன.

அத்துடன் கொத்தாலாவலை பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவர் மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் நிர்வாக உறுப்பினராக இருக்கின்றார். அதேபோன்று பேராசிரியர்களை நியமிக்கும் குழுவில் மானியங்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அங்கு கற்பிக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாகவும் நிதி தொடர்பாகவும் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படுகின்றது. எனவே கொத்தலாவலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படும் பல்கலைக்கழகமாகும்.

அவ்வாறு இல்லாமல் சுயாதீனமாக செயற்படக் கூடியதல்ல. அதேபோன்று இது ராணுவ மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டம் என தெரிவிப்பதாக இருந்தால், அது பொய்யாகும். அவ்வாறான எந்த தீர்மானமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment