சிலுவையில் அறைந்து சித்திரவதை செய்த விவகாரம் : கைதான மாந்திரீகர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

சிலுவையில் அறைந்து சித்திரவதை செய்த விவகாரம் : கைதான மாந்திரீகர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

(எம்.எப்.எம்.பஸீர்)

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய - கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்து சித்திரவதை செய்த சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான அனைத்து சந்தேக நபர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான மாந்திரீகர் வெத்த சிங்க ஆரச்சிலாகே துஷ்மந்த பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார். 5 பொலிஸ் குழுக்கள் அவரை கடந்த ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் (01.07.2021) மாலை அவரும் மேலும் இருவரும் பல்லேகலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்தே அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் நேற்று தெல்தெனிய நீதிவான் எல்.ஜி.பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆகும்.

இந்நிலையிலேயே நேற்று அனைத்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானெல்.ஜி.பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

விசாரணைகள் நிறைவுறவில்லை எனவும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மன்றில் தெரிவித்ததையடுத்தே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

தம்புள்ளை - கண்டலம, கண்டி அம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் மாந்திரீக தேவாலயங்களை நடாத்தி வருவதாக கூறப்படும் 30 வயதுடைய துஷ்மந்த பெர்ணான்டோ எனும் மாந்திரீகரை (பிரதான சந்தேக நபர்) அவமதிக்கும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவிட்டதால் கோபம் கொண்ட மாந்திரீகர், அவ்வாறு பதிவிட்ட இருவரை கடத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இருவருக்கும் கண்டி தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் உடல்நிலை தேரி வருவதாக பொலிஸார் கூறினர். 

கண்டி - பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரத்நாயக்க முதியன்சலாகே மஞ்சுள நிசாந்த ரத்நாயக்க, கடுவலை - போமிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான ரத்நாயக்க முதியன்சலாகே தொன் நிசான் கலிங்க ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, கண்டி பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோன் ஆகியோரின் மேற்பார்வையில் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.கே. ரத்நாயக்கவின் ஆலோசனைக்கமைய பலகொல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன் கண்டி குற்றத் தடுப்புப் பிரிவினர் அதற்கான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

No comments:

Post a Comment