அரசாங்கம் 'வெள்ளை யானையை' ஒத்த அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றது : மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அடுத்து வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளில் நன்கு வெளிப்படும் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

அரசாங்கம் 'வெள்ளை யானையை' ஒத்த அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றது : மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அடுத்து வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளில் நன்கு வெளிப்படும் - நளின் பண்டார

(நா.தனுஜா)

நாடு முகங்கொடுத்திருக்கும் டொலர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறுகின்ற அரசாங்கம், மறுபுறம் நாட்டிற்கு வீண்சுமையை ஏற்படுத்தக் கூடியவாறான 'வெள்ளை யானையை' ஒத்த அபிவிருத்தி செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலையைக் குறைப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று முன்தினம் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்தினால் அரிசியை விற்பனை செய்வதற்கான உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கடைகளில் அந்த விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை. நிர்ணய விலைகளில் அரிசி விற்பனை செய்யப்படாமை தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றது.

இதுவரையான காலமும் சந்தையிலிருந்து கடைகளுக்குக் கொண்டுவரப்படும் அரிசி உரிய நிர்ணய விலையில் விற்பனை செய்யப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், எவ்வாறு அரிசி விலையைக் குறைக்கப் போகின்றது?

அதேவேளை அரசாங்கத்துடன் இருக்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையிலான 'டீலை' நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக அரசாங்கம் பாரியதொரு நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை ஈடு செய்வதற்கான நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.

அதன் ஓரங்கமாக அரசுக்குச் சொந்தமான, சுமார் 300 மெகாவோற் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டொலருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், டொலரைப் பெறுவதற்காகவே அதனை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அதேவேளை மறுபுறம் நாட்டின் கடன் சுமையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய 'வெள்ளை யானையை' ஒத்த செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.

தாமரைக் கோபுரம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமான நிலையம், சூரியவௌ விளையாட்டரங்கு உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தினால் அதன் கடந்த ஆட்சிக் காலத்திலும் பயனற்றதும் நாட்டிற்கு வீண் சுமையை ஏற்படுத்தக் கூடிதுமான அபிவிருத்தித் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் ஆட்பீடமேறியதிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் வெகுவாக அதிருப்தியடைந்துள்ளனர். எனவே கடந்த தேர்தலின்போது அரசாங்கத்திற்குக் காணப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தற்போது இல்லாமல் போயிருக்கின்றது. அதனை அடுத்து வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளின் நன்கு வெளிப்படும்.

எனவே தற்போதைய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கும் நிலையில், அதனை மறைத்துக் கொள்வதற்காக இனவாதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment