அரசாங்கம் அதன் தோல்விகளை மறைப்பதற்காக டயகம சிறுமியின் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது : ரோஹிணி கவிரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

அரசாங்கம் அதன் தோல்விகளை மறைப்பதற்காக டயகம சிறுமியின் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது : ரோஹிணி கவிரத்ன

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு உயிரிழந்த சிறுமியின் விவகாரத்தை, அரசாங்கம் அதன் தோல்விகளை மறைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே அந்த விடயத்திற்கு முக்கியத்துவமளிக்கப்படுவதைப் போன்று காண்பிக்கப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எவ்வாறிருப்பினும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் நிறைவில் குற்றவாளி யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதன் தோல்விகளை மறைப்பதற்காக டயகம சிறுமியின் விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை பெரிதாகக் காண்பித்து அதனை பேசு பொருளாக்கி தனது தோல்விகளை மறைப்பதையே இதன் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

குறித்த சிறுமியின் பெயர், புகைப்படங்கள், குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படங்கள், விபரங்கள் என்பவற்றை வெளியிட்டு அந்த சிறுமி இறந்த பின்னரும் கூட மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுகிறார்.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். விசாரணைகளின் நிறைவில் குற்றமிழைத்தவர் ரிஷாத் பதியுதீனாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் இந்த விவகாரமும் வித்தியா உள்ளிட்ட சிறுமிகளுக்கு நிகழ்ந்ததைப் போன்று வரலாற்றில் ஒரு சம்பவமாக மாத்திரமே இடம்பிடிக்கும் என்றார்.

No comments:

Post a Comment