கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தலையிடுவதற்கு அதிகாரமில்லை எனக்கூறி மக்களைத் தூண்டுகின்றார்கள் : செல்வராஜா கஜேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தலையிடுவதற்கு அதிகாரமில்லை எனக்கூறி மக்களைத் தூண்டுகின்றார்கள் : செல்வராஜா கஜேந்திரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணிப் பிரச்சினை வருகின்ற போது அதில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்ற விடயத்தைக் கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தைச் சார்ந்தவர்கள் மக்களைத் தூண்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சொறிக்கல்முனைப் பகுதியில் சனிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது, காணிப் பிரச்சினை வருகின்ற போது அதில் தலையிடுவதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அதிகாரமில்லை என்கின்ற விடயத்தைக் கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தைச் சார்ந்தவர்கள் மக்களைத் தூண்டுகின்றார்கள். முறைகேடான சட்டவிரோதச் செயல்களைச் செய்வதைத் தூண்டுகின்றார்கள்.

இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின், அரசாங்கம் வர்த்தமானி மூலம் அதைச் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். நிர்வாக ரீதியான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால்தான் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்துப் பேசும் போது அறிய முடிந்தது.

1989ம் ஆண்டு கல்முனை வடக்கு செயலகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலிருந்து கல்முனை 1 சி பகுதியானது, தற்போதுள்ள நிலையில் கல்முனை தெற்கு பிரதேச செயலக எல்லையாக மாற்ற எடுக்கப்படும் நடவடிக்கையானது, இன நல்லுறவைப் பாதிக்கும். தனி நபர் ஒருவர் செய்கின்ற காரியத்தினால் இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுவதனை ஏற்க முடியாது.

எந்த இனமாக இருந்தாலும் மழை நீர் கடலைச் சென்றடையும் வழிமுறைகளைத் தடுக்க முடியாது. இவ்வாறான பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள், கடைகளைக் கட்டுவதற்கு இடமளிக்க கூடாது. இவ்வாறான பிரச்சினைகளினால் நாட்டில் பல இடங்களில் பேரழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன.

சட்டவிரோதச் செயற்பாடுகளினால் வடிகால்கள் மூடப்பட்டிருப்பதனால் இவ்வாறான அழிவுகள் இடம்பெறுகின்றன. அரச உத்தியோகத்தரைத் தாக்கிய நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரச உத்தியோகத்தர் மீதான தாக்குதல் விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதுவும் இச்சம்பவமும் இன முரண்பாட்டினை ஏற்படுத்தும் சம்பவமாகவுள்ளமையினால் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேமென கோரிக்கை விடுக்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad