ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்திருக்கும் அரசாங்கம் பெரஹரவை நடாத்துவதற்கு ஏன் முற்படுகின்றது? - சீரான திட்டமிடல் எதுவுமின்றியே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது : தலதா அத்துகோரள - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்திருக்கும் அரசாங்கம் பெரஹரவை நடாத்துவதற்கு ஏன் முற்படுகின்றது? - சீரான திட்டமிடல் எதுவுமின்றியே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது : தலதா அத்துகோரள

(நா.தனுஜா)

தலதா பெரஹர நிகழ்வை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 25 - 30 பேர் இணைந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தடை விதித்திருக்கும் அரசாங்கம் ஆயிரக்கணக்கானோரை இணைத்து பெரஹரவை நடாத்துவதற்கு ஏன் முற்படுகின்றது? இதன் பின்னாலிருக்கும் 'டீல்' என்ன? முன்னரைப்போன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவந்து பெரஹரவைக் காண்பிக்கின்ற திட்டங்கள் எவையேனும் உள்ளதா? 'தலதா கொத்தணியை' ஏற்படுத்தி, கொவிட்-19 வைரஸ் பரவலின் நான்காவது அலையை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தபோது நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முற்படுவதாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. அது குறித்து பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கம் தற்போது அனைத்துத் துறைகளின் நிர்வாகத்திலும் சீர்குலைந்திருப்பதுடன் முழுமையாக தோல்வி கண்டிருக்கிறது.

அடுத்ததாக நாட்டு மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்கும் விடயத்திலும் அரசாங்கம் முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது. இந்த அரசாங்கம் திட்டமிட்டுப் படுகொலைகளை புரிகின்றது என்றே கூற வேண்டியிருக்கின்றது. 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் தாக்கம் ஏற்பட்டபோது அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது உள்ளடங்கலாக தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே அவதானம் செலுத்திவந்தது. 

பின்னர் வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்பட்டபோது, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறிய அரசாங்கம் கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல், தடுப்பூசி வழங்கல் ஆகியவை தொடர்பில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

சிங்கள, தமிழ் புதுவருடத்திற்காக நாடு முழுமையாகத் திறக்கப்பட்ட காலப்பகுதியில் திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்படக்கூடும் என்றும் அதனால் பாரதூரமான தாக்கங்கள் ஏற்படலாம் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அப்போது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலத்திலிருந்து கொவிட்-19 பரவலின் ஒவ்வொரு அலைகளின் தாக்கத்தின்போதும் அதனை எதிர்கொள்வதற்கான முறையான செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்து ஏற்படக்கூடிய கொவிட்-19 வைரஸ் பரவலின் நான்காவது அலையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய முன்னாயத்த நடவடிக்கைகள் எவை? சீரான திட்டமிடல் எதுவுமின்றியே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்தியாவிலிருந்து அஸ்ராசெனிகா தடுப்பூசி நாட்டை வந்தடைந்தபோது அதனை முறையான செயற்திட்டமின்றி அனைவருக்கும் வழங்கினார்கள். இப்போது அவர்களுக்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment