கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் முழுமையான விபரங்கள் அனைத்தையும் வெளியிடுவதில் சிக்கல், உயிரிழப்பவர்களில் 90 வீதமானோர் தடுப்பூசி பெறாதவர்களே : ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் முழுமையான விபரங்கள் அனைத்தையும் வெளியிடுவதில் சிக்கல், உயிரிழப்பவர்களில் 90 வீதமானோர் தடுப்பூசி பெறாதவர்களே : ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளாந்தம் அவ்வப்போது அறிவிக்கப்படுவதால் முழுமையான விபரங்கள் அனைத்தையும் வெளியிடுவதில் சிக்கல் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் வெகுவிரைவில் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் மரணங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படாமை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பான விபரங்கள் தற்போது அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இதனால் உயிரிழப்பவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் தொகுத்து வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சுகாதார அமைச்சு வெகுவிரைவில் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும்.

தற்போது நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களில் 90 வீதமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். எனவேதான் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் கட்டாயம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 90 வீதமானோருக்கு இரு கட்டங்களாகவும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கினால் கொவிட் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றார் .

No comments:

Post a Comment