ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரிப்பதிலிருந்து 4 ஆவது நீதியரசரும் விலகினார் - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரிப்பதிலிருந்து 4 ஆவது நீதியரசரும் விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு விசாரணைகளிலிருந்து, மற்றுமொரு உச்ச நீதிமன்ற நீதியரசரும் விலகியுள்ளார்.

தாங்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு தெரிவித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று (05) முர்து பெனாண்டோ, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தனிப்பட்ட காரணங்களால் தாம் குறித்த மனு விசாரணைகளில் இருந்து விலகுவதாக, நீதியரசர் மஹிந்த சமயவர்தன அறிவித்தார்.

இதற்கு முன்னர், உச்ச நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இம்மனு தொடர்பான விசாரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை வேளையில் கொழும்பில் வைத்து CIDயினரால் கைது செய்யப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து அவரை பயங்கரவாத தடுப்பு சட்டுத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment