16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலைக்கமர்த்துவதும் இலங்கை சட்டத்தில் குற்றம் - 17,000 இற்கும் அதிகமான புகைப்படங்களும் காணொளிகளும் கிடைப்பு : அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலைக்கமர்த்துவதும் இலங்கை சட்டத்தில் குற்றம் - 17,000 இற்கும் அதிகமான புகைப்படங்களும் காணொளிகளும் கிடைப்பு : அஜித் ரோஹண

(எம்.மனோசித்ரா)

சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் நேற்று வரை 80 பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீட்டு வேலைக்கு மாத்திரமின்றி 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலைக்கமர்த்துவதும் இலங்கையின் சட்டத்திற்கமைய குற்றமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு நபரரும் எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனத்தின் ஊடாக இவ்வாறான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவேற்றினால், பதிவேற்றிய உடனேயே அது குறித்த தகவல்களை கண்டறியும் முறைமை பொலிஸாரால் பேணப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களை முறையற்ற விதத்தில் காண்பித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதிவேற்றப்பட்ட சுமார் 17,000 இற்கும் அதிகமான புகைப்படங்களும் காணொளிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது கண்டியைச் சேர்ந்த நபரொருவர் மாத்திரம் இதுவரையில் இவ்வாறான சுமார் 100 புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவேற்றப்பட்ட ஐ.பி. முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நபர்களை கைது செய்ததன் பின்னர் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்.

16 வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பெற்றோராயினும் பாதுகாவலராயினும் யாராக இருந்தாலும் தண்டனை சட்டக்கோவையின் 308 (ஆ) பிரிவிற்கமைய அது குற்றமாகும்.

எனவே வீட்டு வேலை மாத்திரமின்றி சிறுவர்களை எந்தவொரு வேலைக்கமர்த்தியுள்ளவர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள 197 நாடுகள் தர வரிசைப் பட்டியலில் இலங்கை 25 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலைமையை மேலும் மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment