ரிசாத்தின் வீட்டில் 11 பெண்கள் பணிபுரிந்துள்ளனர் : ஐவரிடம் வாக்குமூலம் பதிவு, விசாரணைகள் தீவிரம் : ஹிசாலினியின் சடலம் நாளை தோண்டியெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

ரிசாத்தின் வீட்டில் 11 பெண்கள் பணிபுரிந்துள்ளனர் : ஐவரிடம் வாக்குமூலம் பதிவு, விசாரணைகள் தீவிரம் : ஹிசாலினியின் சடலம் நாளை தோண்டியெடுப்பு

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவ குழுவினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

அத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த மேலும் 11 பெண்களில் ஐவரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண்களில் எவரேனும் துன்புறுத்தல்களுக்கு அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு உயிரிழந்த சிறுமி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறித்த சிறுமியின் சடலம் விசேட மருத்துவ குழுவின் முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது. நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டயகம மேற்கு 3 ஆம் பிரிவு தோட்ட பொது மயானத்தில் குறித்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறித்த மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்த பிரிதொரு பெண் தொடர்பான தகவல்களும் விசாரணைகளின் போது தெரியவந்தன. உயிரிழந்த சிறுமியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 11 பெண்கள் குறித்த வீட்டில் பணிபுரிந்துள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே டயகம உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு பணிபுரிந்து 11 பெண்களில் ஐவரிடம் இதுவரையில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலங்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்த பெண்களில் எவராவது துன்புறுத்தல்களுக்கு அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் பொரளை பொலிஸார் , சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு , கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு என்பவற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment