ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை விமர்சித்ததன் பலனையே எதிர்க்கட்சியினர் இப்போது அனுபவித்து வருகின்றனர் - பியல் நிஷாந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை விமர்சித்ததன் பலனையே எதிர்க்கட்சியினர் இப்போது அனுபவித்து வருகின்றனர் - பியல் நிஷாந்த

(நா.தனுஜா)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்கான பலத்தை வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,  எதிர்க்கட்சிக்குள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் பாரிய குழப்பமொன்று ஏற்பட்டிருப்பதுடன் அக்கட்சி முழுமையாகப் பிளவடைந்துள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை விமர்சித்ததன் பலனையே அவர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

தற்போது சம்பிரதாய எதிர்க்கட்சியாக செயற்பட்டு வரும் சஜித் பிரேமதாஸ தலைமையில் இயங்கும் அனைத்துத் தரப்பினரும் அரசாங்கம் தொடர்பில் மிகவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

சிறந்த விடயங்களுக்கும் எவ்வித நன்மையையும் தராத விடயங்களுக்கும் பொதுவாக எதிர்ப்பை வெளியிட்டு வரும் தரப்பினரையே 'சம்பிரதாய எதிர்க்கட்சியினர்' என்று விளிக்கின்றோம்.

அவர்கள் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், அனைத்து சவால்களுக்கும் முகங்கொடுத்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். 

அவ்வனைத்து முயற்சிகளின்போதும் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள் என்றார்.

மேலும், எதிர்க்கட்சிக்குள் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் குழப்பமொன்று காணப்படுவது தெளிவாகியுள்ளது. இந்த அணி பல பாகங்களாகப் பிளவடைந்துள்ளது என்பதும் வெளிப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கிலேயே சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் செயற்பட்டனர். அதற்கான பலனையே இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment