நாட்டை முழுமையாக முடக்குவதன் ஊடாக மாத்திரம் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாது - வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

நாட்டை முழுமையாக முடக்குவதன் ஊடாக மாத்திரம் கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாது - வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

(நா.தனுஜா)

நாட்டை 14 நாட்களோ அல்லது 28 நாட்களோ முழுமையாக முடக்குவதன் ஊடாக மாத்திரம் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பதை சுகாதார நிபுணர்கள் நியாயபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய கடிதமொன்று புதன்கிழமை இலங்கை மருத்துவ அமைப்பினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பரிந்துரைகளில் மேலும் ஒரு வாரத்திற்கு நாட்டில் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதனை மேற்கோள்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய, மேலும் கூறியிருப்பதாவது, ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ அமைப்பு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் எனக்குப் பிரதானமாக இரண்டு சந்தேகங்கள் எழுகின்றன.

14 நாட்கள் நாட்டை முடக்குவதன் ஊடாக கொவிட்-19 வைரஸ் பரவல் சங்கிலியை முறியடிக்க முடியும் என்று ஆரம்பத்தில் ஜனாதிபதியிடம் கூறியவர்கள், தற்போது மேலும் 7 நாட்கள் நாட்டை முடக்க வேண்டும் என்று கோருகின்றார்கள்.

உண்மையில் 14 நாட்கள் முடக்கத்தின் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த முடியும் என்பது உலகளாவிய ரீதியில் எவ்வகையிலும் நிரூபணமாகியிருக்கவில்லை.

ஆகவே 14 நாட்களோ அல்லது 28 நாட்களோ நாட்டை முடக்குவதன் ஊடாக இதனை முடிவிற்குக் கொண்டுவர முடியாது என்பதை சுகாதார நிபுணர்கள் நியாயபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று எவ்வளவு நாட்கள் முடக்கப்பட வேண்டும் என்பதையும் துல்லியமாக மதிப்பிட முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வலியுறுத்தப்பட்டபோது, அதனை ஆதரிக்காமையினால் இவ்விடயத்தில் இலங்கை மருத்துவ அமைப்பு தோல்வி கண்டுள்ளது என்று அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment