கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில் 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், சுமார் 10 கடல் மைல் தூரத்தில் 70 அடி (21 மீற்றர்) ஆழத்தில் தொடர்ந்தும் கடலில் மூழ்கி வருகிறது.
கப்பலின் பின் பகுதியின் அடிப்பகுதி கடற் தரையை தட்டியுள்ள நிலையில், தற்போது முன் பகுதியும் மெதுவாக கடலில் மூழ்கி வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த கப்பலை மீட்கும் பனிகளில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து மீட்புக் குழுவினர், அடுத்த கட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஒரு முறை அறிக்கை பெற்று விஷேட அவதானத்தை செலுத்தி வருவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
கப்பலில் இருந்த பெரும்பாலான கொள்கலன்கள் எரிந்துவிட்ட நிலையில், தற்போது குறித்த கப்பலால், ஏற்படக்கூடிய சூழல் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவும், எண்ணெய் கசிவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் உரிமையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக ஓ.எஸ்.பி.எல் எனப்படும் எண்னெய் கசிவு தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும் சர்வதேச தனியார் நிறுவனம் ஒன்றுடனும், ஐ.ரி.ஓ.பி.எப். எனப்படும் சர்வதேச கப்பல் உரிமையாளர்களின் சூழல் தடுப்பு ஒன்றிய தனியார் நிறுவனத்தினதும் தொழில் நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவியுடன் இலங்கை கடற்படையினரையும் ஒன்றிணைத்த, ஒருங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனம் தெரிவித்தது.
இவ்வாறான நிலையில் கப்பலில் ஏதேனும் எண்ணெய் கசிவுகள் ஏற்படுகின்றனவா என்பதை உறுதி செய்யவும், கடலின் தரையை தொட்டுள்ள கப்பலின் பின் பகு ஏதும் சேதமடைந்துள்ளதா என்பதை உருதி செய்யவும் நேற்று கடற்படையின் 9 சுழியோடிகள் முத்துக் குளித்து ஆய்வு செய்தனர்.
எனினும் இதன்போது போதிய வெளிச்சம் இன்மையால் முழுமையாக அது தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்த முடியவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இதனிடையே, கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுமாயின் அதனை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
கப்பலில் 322 தொன் எண்ணெய் காணப்பட்ட போதிலும் தற்போது எந்தளவு எண்ணெய் காணப்படுகின்றது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
இதேவேளை கப்பல் தீப்பற்றியதால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சிறப்பு குழுவொன்று செயற்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணத்தின் நேரடி கட்டுப்பாட்டில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடல்சார் விவகாரங்களை கண்கானிக்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூவை உள்ளடக்கிய சிறப்புக்குழு இந்நடவடிக்கைகளி முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதன்படி தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த அரச நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.
இதனிடையே, கப்பலின் தீ அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கப்பலின் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனத்துடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கப்பல் துறை செயலகத்தின் பணிப்பாளர் அஜித் தென்னகோன் கூறினார்.
இது தொடர்பில் உரிய மதிப்பீடுகளை முன்னெடுத்து நட்ட ஈட்டு தொகையை அறிவிக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் நட்ட ஈடு செலுத்த அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இது இவ்வாறிருக்க, கப்பலின் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவருக்கு ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், தற்போது கப்பல் பணிக்குழுவின் ஏனைய 22 பேருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் பரவிய தீ தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டமாக நேற்றையதினம், கப்பலில் பொருட்களை ஏற்றும் இறக்கும் பணிகளுக்கு பொறுப்பாக இருந்த சீன, இந்திய பிரஜைகள் இருவரிடம் சி.ஐ.டி.யினர் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் கப்பல் உரிமை நிறுவனமான எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைக்ளுக்கு பூரண ஒத்துழைப்பை தமது நிறுவனம் வழங்கும் எனவும், கப்பல் ஊழியர்கலின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் தாம் விமர்சனங்களையோ கருத்துக்களையோ முன்வைக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
(எம்.எப்.எம்.பஸீர்) வீரகேசரி
No comments:
Post a Comment