ஹிங்குராங்கொட கொள்ளைச் சம்பவங்கள் : விமானப்படை சிப்பாய் உட்பட இருவர் கைது - விசாரணையில் வெளிவரும் தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

ஹிங்குராங்கொட கொள்ளைச் சம்பவங்கள் : விமானப்படை சிப்பாய் உட்பட இருவர் கைது - விசாரணையில் வெளிவரும் தகவல்கள்

(செ.தேன்மொழி)

ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஹிங்குராங்கொட பகுதியில் அண்மை காலமாக இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டுக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விமானப்படை சிப்பாய் ஒருவரும், அவருக்கு உதவி ஒத்தாசைகளை புரிந்த பிரிதொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சி.சி.ரீ.வி காணொளி காட்சிகள் ஊடாகவும், பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தியும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கமைய இரு வருட காலமாக இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக விமானப்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொணராகலை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டை சோதனைக்குட்படுத்திய போது கொள்ளையிட்ட பணங்களால் கொள்வனவு செய்யப்பட்ட கெப் ரக வாகனம் ஒன்றும், மிளகாய்களை அரைக்கும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கொள்ளையிடும் தங்க நகைகளை உருக்கிய பின்னரே, அவற்றை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இதன்போது அவர் மொணராகலை பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கே, அந்த நகைகளை விற்பனை செய்துள்ளதுடன், குறித்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சந்தேக நபரான சிப்பாய்க்கு இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களின் போது உதவி ஒத்தாசைகளை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment