(எம்.எப்.எம்.பஸீர்)
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நுகேகொடை பொலிஸ் வலயத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை விசாரணை பணிப்பாளராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் பத்மினி வீரசூரிய, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் நலனோம்பு பிரிவின் பனிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த போதும், பத்மினி வீரசூரியவின் மேன் முறையீடு காரணமாக அது தள்ளிப்போனது. எனினும் தற்போது அவ்விடமாற்றம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சராக பொலிஸ் சேவையில் இணைந்த நுவன் அசங்க, குருணாகல் பொலிஸ் வலயத்தில் சேவையாற்றிய பின்னர் நேரடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
சட்டத்தரணியும் சர்வதேச உறவுகள் தொடர்பிலான பட்டதாரியுமான அவர், குற்றப் புலனாய்யவுத் திணைக்களத்தில் பல முக்கிய விவகார விசாரணைகளை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையிலேயே, கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றப்பட்டு பொலிஸ் தலைமையகத்துக்கும், அங்கிருந்து தற்காலிகமாக நுகேகொடை பொலிஸ் வலயத்துக்கும் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment